தேடுதல்

Vatican News
மரம் வளர்த்து மழை பெறுவோம் மரம் வளர்த்து மழை பெறுவோம்  (AFP or licensors)

பூமியில் புதுமை : ‘மரம் வளர்த்து மழை பெறு’ என்ற மந்திரம்

ஓர் ஏக்கர் பரப்பில் உள்ள தானியப் பயிர்களின் இலைப்பரப்பைவிட, அதே பரப்பில் உள்ள காடுகளின் இலைப்பரப்பு பல மடங்கு என்பதால், ஆவியாகி வெளியேறும் நீரின் அளவும் அதிகம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

இயற்கை வளங்கள் நீடித்து நிலைக்க ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாக இருக்கவேண்டும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மக்கள் தொகை பெருக்கமும், வாழ்க்கைத்தர உயர்வும், இன்று, இயற்கை வளங்களை சூறையாடி வருகின்றன. இந்தியாவில், 19 விழுக்காட்டு நிலப்பரப்பிலும், தமிழ்நாட்டில், 16 விழுக்காட்டு நிலப்பரப்பிலும், காடுகள் உள்ளன. விவசாயத்திற்காகவும், தொழிற்சாலைகளுக்காவும், விறகுக்காகவும், இன்னும் பல காரணங்களுக்காகவும், காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் நீர் பிடிப்புத்திறன் குறைந்து, நிலம் வளமிழந்து, தரிசாக மாறிவருகிறது. எனவே, காடுகளை அழிப்பதை நிறுத்தி, காடுகளை செம்மைப்படுத்த வேண்டும். மேகங்களை கவர்ந்து, மழையாக பொழியச்செய்யும் சக்தி, காடுகளுக்கு உள்ளது. ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தானியப் பயிர்களின் இலைப்பரப்பைக் காட்டிலும், அதே நிலப்பரப்பில் உள்ள காடுகளின் இலைப்பரப்பு பல மடங்கு அதிகமாக இருப்பதால், ஆவியாகி வெளியேறும் நீரின் அளவும் அதிகமாக இருக்கும். இவ்வாறு ஆவியாகும் நீர் மேலே சென்று, உயரே செல்லும் மேகங்களுக்கு நீர்ச் செறிவை ஊட்டி, மழையைப் பொழியச் செய்யும். ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படை இதுதான். காடுகளில் மழை பெய்யும்போது, இலைச்சருகுகள், மக்குகள் அதிக நீரை பிடித்து வைத்துக்கொள்கின்றன. மழைநீரை அறுவடை செய்யும் களங்களாக உள்ள காடுகளை பராமரித்தால்தான், மழைநீர் சேமிக்கப்பட்டு, பல மாதங்களுக்கு ஊறும் ஊற்றுக்களாக மாறி, நல்ல பலன் கொடுக்கும். எனவே, காடுகளின் நிலப்பரப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

02 August 2019, 15:10