தேடுதல்

Vatican News
NDTV ன் ரவிஷ் குமார் NDTV ன் ரவிஷ் குமார் 

இந்தியாவின் ரவிஷ் குமாருக்கு ரமோன் மகசேசே விருது

ரவிஷ் குமார் அவர்கள், அதிகம் பேசப்படாத சாதாரண மக்களின் உண்மை வாழ்வு நிலை பற்றிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து, பலரும் பார்க்கக்கூடிய நேரத்தில் ஒளிபரப்புகின்றார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நொபெல் விருதுக்கு நிகரான, ஆசியாவின் நொபெல் விருதான, இவ்வாண்டின் ரமோன் மகசேசே விருது, இந்திய ஊடகவியலாளர் ரவிஷ் குமார் அவர்கள் உட்பட, ஐவருக்கு வழங்கப்படுவதாக, ஆகஸ்ட் 02, இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் NDTV தொலைகாட்சியின் மூத்த முதன்மை தொகுப்பாளர் ரவிஷ் குமார், மியான்மாரின் Now என்ற சமுதாய இதழின் ஆசிரியர் Ko Swe Win, தாய்லாந்தின் மனித உரிமை ஆர்வலர் Angkhana Neelapaijit, பிலிப்பீன்சின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் Raymundo Pujante Cayabyab, தென் கொரியாவின் Kim Jong-Ki ஆகிய ஐவருக்கும் இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் மக்களின் வாழ்வை முன்னேற்றி, சமுதாயங்களில் மாற்றத்தைக் கொணர்வதற்கு, அறநெறிசார்ந்த துணிச்சலோடும், தொலைநோக்குப் பார்வையோடும், பேரார்வத்தோடும் உழைத்தவர்களுக்கென, இவ்விருது வழங்கப்படுகின்றது என்று, ரமோன் மகசேசே விருது விருது அறக்கட்டளையின் தலைவர் Carmencita Abella அவர்கள் கூறினார்.

44 வயது நிரம்பிய ரவிஷ் குமார் அவர்கள், உண்மை, ஒருங்கமைவு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைக் காப்பதில், துணிச்சலோடு செயல்படுபவர் என்று பாராட்டப்பட்டுள்ளார். மனிதக்கழிவுகளை கைகளால் திரட்டுவோர், ரிக்சா ஓட்டுனர்கள் போன்றோர் உட்பட, அதிகம் பேசப்படாத சாதாரண மக்களின் உண்மை வாழ்வு நிலை பற்றிய நிகழ்ச்சிகளை ரவிஷ் குமார் அவர்கள், தொகுத்து வழங்கியதற்காகப் பாராட்டப்பட்டுள்ளார். இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பலரும் பார்க்கக்கூடிய நேரத்தில் ஒளிபரப்பாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மார் நாட்டு ஊடகவியலாளர் Swe Win அவர்கள், நீதி மற்றும் உண்மை சார்ந்த விடயங்களை துணிச்சலுடன் வெளியிடுகின்றவர்.

மனித உரிமை ஆர்வலர் Angkhana Neelapaijit அவர்கள், தாய்லாந்தின் தென்பகுதியில், வன்முறை மற்றும் ஆயுத மோதல்களுக்குப் பலியானவர்களுக்கு நீதி கிடைப்பதில், மனம் தளராமல், துணிச்சலுடன் உழைத்தவர். இவர், 2006ம் ஆண்டில், அமைதிக்காக நீதி என்ற அறக்கட்டளையை உருவாக்கினார்.

தென் கொரியாவின் Kim Jong-ki அவர்கள், தனது மகன் தற்கொலை செய்துகொண்டதற்குப் பின்னர், இளையோர் வன்முறையைத் தடுப்பதற்கு அறக்கட்டளையை அமைத்தவர்.

வருகிற செப்டம்பர் 9ம் தேதி, மனிலாவிலுள்ள, கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.

ஆசியாவில், சமுதாயநலத் தொண்டு, கலை, இலக்கியம், வளரும் தலைவர்கள் என்று, பல பிரிவுகளில், ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இவ்விருது, பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர் ரமோன் மகசேசே அவர்கள் பெயரில், 1957ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது (Agencies)

02 August 2019, 15:19