தேடுதல்

Vatican News
அமேசான் பழங்குடியினத் தலைவர் ஒருவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் அமேசான் பழங்குடியினத் தலைவர் ஒருவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (ANSA)

அமேசான் பழங்குடி இனத் தலைவர் கொலைக்கு கடும் கண்டனம்

தங்கள் நிலத்தில் தங்கச் சுரங்கப் பணிகளை நிறுத்தவேண்டும் என்று போராடிவந்த Wajãpi இனத்தின் தலைவரை, சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருப்போர், ஜூலை 26ம் தேதி கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பழங்குடி மக்களில், Wajãpi இனத்தின் தலைவரான Emrya Wajãpi அவர்கள் அண்மையில் கொல்லப்பட்டிருப்பதை, பிரேசில் நாட்டில் பணியாற்றும் மறைப்பணியாளர் குழுவும், ஐ.நா. அவையின் மனித உரிமைகள் குழுவும் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளன.

தங்கள் நிலத்தில் தங்கச் சுரங்கப் பணிகளை நிறுத்தவேண்டும் என்று போராடிவந்த Wajãpi இனத்தின் தலைவரை, சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருப்போர், ஜூலை 26ம் தேதி கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் சுரங்கத் தொழில்களை எதிர்க்க, மக்கள் விழிப்புணர்வு பெற்றுவரும் வேளையில், இத்தகைய கொலைகள் வழியே, அவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க, வர்த்தக நிறுவனங்கள் முயல்கின்றன என்று, அப்பகுதியில் பணியாற்றும் அருள் சகோதரிகளின் தலைவி, Neusa de Fatima Mariano அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

சுரங்கத் தொழில், மரங்களை வெட்டும் தொழில் ஆகிய இயற்கைக் சீரழிவு முயற்சிகளுக்கு எதிராக, கத்தோலிக்கத் திருஅவையின் பணி, பெரும் சவால்கள் நிறைந்த பணியாக மாறியுள்ளது என்று, அருள் சகோதரி Mariano அவர்கள் கூறினார்.

தங்களுக்கு உரிமையான நிலத்தைக் காப்பதற்கு, பழங்குடியினர் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு, கொலைகள் போன்ற வன்முறைகள் வழியே பதில் தரும் நிறுவனங்கள், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உயர் அதிகாரி, Michelle Bachelet அவர்கள், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அமேசான் பகுதி பழங்குடியினரின் நில உரிமைகளைக் காப்பதற்குப் போராடியவர்களில், 2018ம் ஆண்டு மட்டும், குறைந்தது, 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று, பீதேஸ் செய்தி பதிவு செய்துள்ளது. (ICN/Fides)

01 August 2019, 14:59