தேடுதல்

Vatican News
மழை நீர் சேமிப்பு மழை நீர் சேமிப்பு 

பூமியில் புதுமை – மழை நீர் இயற்கையின் வரம்

மழை நீரில் அமிலம் கலந்திருப்பதால் அதைச் சேமிக்கும்போது, கூரை, இணைப்புக் குழாய், சேமிப்புத் தொட்டி போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்

மேரி தெரேசா – வத்திக்கான்

மழை நீர் இயற்கையின் வரம். மழைதான் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது. கிணறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் காரத்தன்மை நிறைந்திருக்கிறது. மேலும், தாது உப்புகளும் இருக்கின்றன. மழை நீரில் காரத்தன்மையும் உப்புத்தன்மையும் குறைவு. மாறாக, அதில் அமிலத்தன்மை இருக்கும். நிலத்தடி நீரில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவையும் கூட்டுத்தனிமங்களான குளோரைடு, கார்பனேட், சல்பேட் போன்றவையும் இருக்கின்றன. ஆனால் மழை நீரில் தனிமங்கள் இல்லை என்றாலும், அது சுத்தமானது. ஆயினும், மழை நீரில் அமிலம் கலந்திருப்பதால் அதைச் சேமிக்கும்போது, கூரை, இணைப்புக் குழாய், சேமிப்புத் தொட்டி போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். பறவைகளின் எச்சம், இலை தழைகள், மண் போன்றவை கலந்துவிட வாய்ப்புண்டு. அதனால் அதை தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, மழைநீர் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான தே.ஞானசூரிய பகவான் அவர்கள், மழை நீர் குறித்து சொல்லியுள்ளார். 

கொத்தமங்கல விவசாயி வீரமணி

புதுக்கோட்டைக்கு அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி வீரமணி என்பவர், தன் வீட்டில் தூர்ந்துபோய்க்கிடந்த கிணற்றைச் சீரமைத்து அதிலிருந்து கிடைக்கும் நீரைக் குடிநீராகவும், மரங்கள் வளர்க்கவும் பயன்படுத்தி வருகிறார். இவரது தாத்தா காலத்தில் கட்டப்பட்ட அந்த கிணறு, வீட்டுக்குப் பிரச்சனையாக உள்ளது என்று சொல்லி, 15 வருடங்களுக்குமுன் அது மூடப்பட்டுவிட்டதாம். தண்ணீர் பஞ்சம் ஏற்படவே, கிணற்றைத் தூர்வார, தனி ஆளாக இவர் களத்தில் இறங்கினார். மூன்று மாதங்கள் சென்று, குடும்பத்தினரும் உதவ, தற்போது கிணற்றை முழுவதுமாக தூர்வாரி விட்டார் அவர். அத்துடன், வீட்டின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும், வீட்டின் மேற்கூரையிலிருந்தும் விழும் தண்ணீர் வெளியே செல்லாதபடி, இரும்புத் தகரங்களைப் பக்கவாட்டில் அமைத்து, குழாய்கள் மூலம் மழை நீரைக் கிணற்றுக்குள் கொண்டு சென்று சேகரித்துள்ளார். அதனால் வீட்டின் மேற்கூரையில் விழும் ஒரு துளி மழை நீர்கூட வீணாகாமல் செய்துள்ளார். மழை நீர் கிணற்றுக்குள் செல்வதற்கு முன்பு, மூன்று வகையான வடிப்பான்கள் மூலம் தூசுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, சுத்தமான நீர் மட்டும் கிணற்றுக்குள் செல்லும்படி அமைத்துள்ளார், விவசாயி வீரமணி (நன்றி- பசுமை விகடன்)

05 August 2019, 15:07