தேடுதல்

Vatican News
வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் - ‘daffodils’ கவிதை வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் - ‘daffodils’ கவிதை 

பூமியில் புதுமை: இயற்கையில் இதயத்தை பறிகொடுத்தவர்

அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு ஒரே ஒரு புல்லின் இதழையாவது உங்களால் உருவாக்கிக் காட்ட முடியுமா? உங்கள் இயந்திரங்களைக்கொண்டு ஒரே ஓர் இலைக்காவது வசந்தத்தைக் கொண்டுவந்து சேர்க்க முடியுமா?-வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

18ம்,19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆங்கில கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் (7,ஏப்.1770-23,ஏப்.1850) அவர்கள், பிரித்தானியாவின் கவிப்பேரரசர். இயற்கையோடு ஒன்றாகிக் கலந்துவிட்ட தனது வாழ்வை, மாந்திரீகச் சொற்களால் கவிதைகளாக்கியவர். ஒரு பத்தடி நடந்துவிட்டு வருகிறேன் என்று காலையில் சொல்லிப் போகிறவர், மாலையில்தான் வீடு திரும்புவாராம். வழியில் என்ன நடந்தது என்று கேட்டால், சிந்தித்தபடியே மலைச்சரிவுக்குப் போனேனா? மஞ்சள் நிறத்தில் பேரரளிப் பூக்கள் பூத்துக் கிடந்ததைப் பார்த்தேனா! ‘என் பணி பூத்துக்கிடப்பதே’ என்று ஒரு குழந்தையைப்போல் கபடமின்றி சிரிக்கும் பேரரளியை எப்படி வெறுமனே கடந்துபோக முடியும்? அப்படியே புல்வெளியில் அமர்ந்துவிட்டேன். ஒரு வழியாக மனதைத் தேற்றிக்கொண்டு மாலை வாக்கில் எழுந்திருக்கும் நேரம் பார்த்தா ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம் பறந்துவர வேண்டும்?... இவ்வாறு ஊன் உறக்கம் மறந்து, இயற்கையில் தன்னை இழந்து, அதிலே திளைத்திருந்தவர். உலகப் புகழ்பெற்ற அவரது ‘daffodils’ மலர்கள் பற்றிய கவிதையை எவரும் மறக்க இயலாது. “மலையின் மேலே மடுவின் உள்ளே திரண்ட மேகம் தனியே மிதந்து தாவிச்செல்வதுபோல நான் உலாவித் திரிந்தேன். இப்போது திடீரென்று மனம் கவரும் மலர்க்குழு என்னை வரவேற்றது. தங்கநிறத் தகடுகள் அவை” என்றார் கவிஞர். இந்த இயற்கை கவிஞர் வாழ்ந்த காலத்தில், மேற்கத்திய உலகைத் தொழில் புரட்சி ஆக்ரமித்து, அவர்கள், இயற்கையை வென்றுவிட்டோம், உலகை வசப்படுத்திவிட்டோம் என்று முழங்கினர். அப்போது வோர்ட்ஸ்வொர்த் அவர்கள் கேள்வி எழுப்பினார் – நண்பர்களே, ஒரு மலையை உடைத்துப் பெயர்த்துதான் ஓர் ஆலையை அமைக்க முடியும் என்றால், அந்த ஆலை எனக்கு வேண்டாம். ஒரு காட்டை அழித்துவிட்டு அங்கே இயந்திரங்களை வளர்க்கப் போகிறீர்கள் என்றால் அந்த இயந்திரங்களை நான் வெறுப்பேன். ஏரிகளையும் மரங்களையும் புல்வெளிகளையும் இவற்றை எல்லாம் நம்பி வாழும் உயிரினங்களையும் விழுங்கிவிட்டு, கறுத்த புகையை வெளியில் விடும் ஆலைகளை உருவாக்கிக்கொண்டே போகிறீர்கள். இன்னும், இன்னும் என்று அடங்கா வேட்கையோடு நீங்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க அச்சமாக இருக்கிறது. காடு, அருவி, கடல், மலை என்று முழு பூமியையும் உருட்டித் தின்றாலும் வளர்ந்துகொண்டே போகிறது உங்கள் பசி. நம் எல்லாருடைய பசியையும் தீர்க்க இயற்கை போதும். ஆனால், இயற்கையை இயந்திரம் உண்ணத் தொடங்கினால் உலகையே கொடுத்தாலும் போதாது என்று. (நன்றி-இந்து தமிழ் திசை)

01 August 2019, 15:06