தேடுதல்

Vatican News
மும்பை கனமழையில் காப்பாற்றப்பட்ட மக்கள் மும்பை கனமழையில் காப்பாற்றப்பட்ட மக்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : மும்பை வளர்ச்சிக்காக பலியாகும் இயற்கை

சதுப்பு நிலக் காடுகளை அழிப்பது, மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் திட்டத்தால் 13.36 ஹெக்டேரில் பரவியுள்ள 54,000 சதுப்புநில மரங்கள் பாதிக்கப்பட உள்ளதாக மகாராஷ்டிர சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர், ஜூன் 24ம் தேதி தெரிவித்தார். அதிவேக இரயில் திட்டத்தால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் அழிவு குறித்து முதன்முறையாக மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அதிவேக இரயில் பாதையானது பல ஹெக்டேர் விவசாய நிலங்கள், மலைப்பாங்கான பகுதிகள், தரிசு நிலங்கள், பழத் தோட்டங்கள், பழங்குடிப் பகுதிகள், வனப் பகுதிகள், மலைகள், ஆறுகள், உப்பங்கழிகள் மற்றும் பிற நகர வாழ்விடங்களின் வழியாகச் செல்லும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். இது தவிர, கடற்கரை சாலைக்காக 164 ஹெக்டேர் நிலப்பகுதி மொத்தமாக ஆக்ரமிக்கப்பட வேண்டியுள்ளதாம்.

ஆண்டுதோறும் மும்பையில் பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. சதுப்புநிலக் காடுகளை அழிப்பது நிலைமையை இன்னும் கடுமையானதாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஜூலை 26, 2005ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் 1,000 பேர் பலியானார்கள். அண்மையிலும் மும்பையில், விடாதுபெய்த கனமழையையும் வெள்ளப்பெருக்கையும் பார்த்தோம். இயற்கையுடன் விளையாடினால் அதன் எதிர்வினை இப்படித்தான் கடுமையாக இருக்கும் என்று, மழைக்கு பிறகு இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சதுப்புநில சமுதாய அமைப்பின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.

மெட்ரோ திட்டத்திற்காக, 2017 முதல் இன்று வரை 1,200க்கும் அதிகமான மரங்கள் தெற்கு மும்பையிலிருந்து, ஆரேய் (Aarey) காலனிக்கு பிடுங்கி நடப்பட்டன. அவற்றில் 50 விழுக்காட்டிற்கும்மேல், புதிய இடத்திற்குக் கொண்டுபோவதற்குள் மடிந்துவிட்டன. வேரோடு பெயர்ப்பது, எடுத்துச் செல்வது மற்றும், மீண்டும் நடுவது போன்ற செயல்கள், முறையாக நடக்காததால், மரங்கள் சில நாட்கள்கூட உயிருடன் இல்லை என்பது, நாம் கண்ட உண்மை.

07 August 2019, 15:58