தேடுதல்

Vatican News
வன அலுவலர் மணி, ஐந்து ஆண்டுகளில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருப்பவர் வன அலுவலர் மணி, ஐந்து ஆண்டுகளில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருப்பவர்  

பூமியில் புதுமை: ஓய்வுபெற்ற வன அலுவலரின் சூழலியல் ஆர்வம்

சமுதாயத்துக்காக, ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நான், இதுநாள்வரை, 12 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, பாதுகாத்து வருகிறேன் - வனஅலுவலர் மணி

மேரி தெரேசா - வத்திக்கான்

சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற, மாவட்ட வனஅலுவலர் மணி என்பவர், ஐந்து ஆண்டுகளாக, பொது இடங்களில், 12 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, பசுமைக் காப்பாளராக திகழ்ந்து வருகிறார். 68 வயது நிரம்பிய மணி அவர்கள், 2014ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், ஆத்துார் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள, அரசு அலுவலக வளாகம், அரசு தனியார் பள்ளிகள், சாலையோரம் உள்ளிட்ட இடங்களில், பல வகையான மரக்கன்றுகளை நட்டு வருகிறார். தற்போது வரை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அவர் நட்டுள்ளார். வேம்பு, புங்கன், அத்தி, அரசு, மருது, நாவல், வாகை, பூவரசு, புளியங்கன்று என, பல வகையான மரக்கன்றுகளை வளர்த்து, அவை மூன்று முதல் ஐந்து அடி வரை வளர்ந்தபின், அந்த இடங்களில் நட்டு பராமரிக்கிறார். இப்பணியில் அவரது மனைவியும், மூன்று மகள்களும் உதவி வருகின்றனர். இது குறித்து, மணி அவர்கள், இவ்வாறு கூறியிருக்கிறார். வனத்துறையில், 32 மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். பணி ஓய்வுக்குப்பின், சேலம் - உளுந்துார்பேட்டை, நான்கு வழிச்சாலையில், மரக்கன்றுகள் இல்லாததால், நீண்ட நாள் பலன்தரும் மற்றும், பறவைகள் உண்ணும் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். சமுதாயத்துக்காக, ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நான், இதுநாள்வரை, 12 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, பாதுகாத்து வருகிறேன். தவிர ஏரிகளில், 10 ஆயிரம், இரயில் பாதையில், 5,000 என, பனங்கொட்டைகள் நடவு செய்து உள்ளேன். 'பசுமை மையம்' அறக்கட்டளை வழியாக, நான் இறக்கும் வரை, இப்பணியைச் செய்வேன். (நன்றி-தினமலர்)

நெல்லை அருகே உள்ள மூலை கருப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் பெற்றோர் கைச்செலவுக்கென வழங்கும் இரண்டு ரூபாயை மொத்தமாகச் சேர்த்து, 1,200 ரூபாயாக,  ஆசிரியரிடம்  கொடுத்தனர். ஆசிரியரும், அந்தப் பணத்தை வைத்து J.C.P இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து எல்லாரும் சேர்ந்து குளத்தை சுத்தம் செய்துள்ளனர். அரசையோ, அரசியல்வாதிகள் உதவியையோ நாடாமல் நம்பிக்கையுடன் மாணவர்கள் இச்செயலைச் செய்துள்ளனர் (நன்றி-தினகரன்)

08 August 2019, 15:45