தேடுதல்

Vatican News
சூரிய சக்தி தகடுகள் கூரையில் பொருத்தப்பட்ட புனித 6ம் பவுல் அரங்கத்தின் உள்புறம் சூரிய சக்தி தகடுகள் கூரையில் பொருத்தப்பட்ட புனித 6ம் பவுல் அரங்கத்தின் உள்புறம்  (ANSA)

பூமியில் புதுமை – வத்திக்கானில் பசுமை முயற்சிகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் போலவே, அவருக்கு முன்னதாக தலைமைப் பொறுப்பில் இருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும், இயற்கை மீது அக்கறை கொண்டிருந்தனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

பூமிக்கோளத்தைக் காப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டிவரும் அக்கறை, 2015ம் ஆண்டு அவர் எழுதிய "இறைவா உமக்கே புகழ் - நம் பொதுவான இல்லமான பூமியைப் பேணுதல்" என்ற திருமடல் வழியே, சக்திவாய்ந்த முறையில் வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து, வத்திக்கானில், பசுமை முயற்சிகள் பல முழு வீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முயற்சிகளைக் குறித்து, வத்திக்கான் தோட்டங்களின் பொறுப்பாளர், இரபேல் இக்னாசியோ தொர்னீனி (Rafael Ignacio Tornini) அவர்கள் செய்தியாளர்களுக்கு வெளியிட்ட ஒரு சில கருத்துக்கள்:

குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, வத்திக்கானில் சேர்க்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யும், 'சுற்றுச்சூழல் மையம்' வத்திக்கானில் உருவாக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்த மையத்திற்கு வந்துசேர்ந்த குப்பைகளில், 98 விழுக்காடு குப்பைகள், ஐரோப்பிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன.

வத்திக்கானுக்கு வருகைதரும் பயணிகள் தூக்கியெறியும் குப்பைகள், வத்திக்கானுக்கு பெரும் சவாலாக உள்ளது என்பதையும், ஞெகிழிப்பொருள்களின் பயன்பாடு, உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து என்பதையும் குறிப்பிட்ட தொர்னீனி அவர்கள், ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் ஞெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை, வத்திக்கான் நிறுவனங்கள் விரைவில் நிறுத்திவிடும் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் போலவே, அவருக்கு முன்னதாக தலைமைப் பொறுப்பில் இருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும், இயற்கை மீது அக்கறை கொண்டிருந்தனர் என்பதை, தொர்னீனி அவர்கள், சிறப்பாகக் குறிப்பிட்டார். இவ்விரு திருத்தந்தையர் வெளிப்படுத்திய விருப்பத்தின் பேரில்,  2008ம் ஆண்டு முதல், சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வகையில், வத்திக்கானின் பல கட்டடங்களில் கூரைகள் வடிவமைக்கப்பட்டன.

புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தின் கூரையில், 5000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு நிறுவப்பட்டிருக்கும், 2,700க்கும் அதிகமான சூரிய சக்தி தகடுகள், அந்த அரங்கத்திற்குத் தேவையான மின்சக்தியை வழங்குவதோடு, அவ்வரங்கத்தை அடுத்திருக்கும் சில கட்டடங்களுக்கும் மின்சக்தி வழங்குகின்றன.

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும், சிஸ்டீன் சிற்றாலயத்திலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, அதே நேரம் குறைந்த சக்தியை பயன்படுத்தும் LED ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாண்டு சனவரி மாதம் முதல், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் உள்புறத்திலும், இவ்வகை விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன என்று, வத்திக்கான் தோட்டங்களின் பொறுப்பாளர், இரபேல் இக்னாசியோ தொர்னீனி அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

17 August 2019, 15:37