தேடுதல்

Vatican News
இந்திய தேசிய மருத்துவர் நாள் ஜூலை 01 இந்திய தேசிய மருத்துவர் நாள் ஜூலை 01  

வாரம் ஓர் அலசல் - இந்திய தேசிய மருத்துவர் நாள் ஜூலை 01

மனிதரின் உடல் நலத்தோடு உள்ள நலத்திற்கும் புனிதமான பணியாற்றிவரும் மருத்துவர்கள் அனைவருக்கும், நன்றியுடன் நம் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். மனம்விட்டுச் சிரித்தல், நல்ல உறக்கம் ஆகிய இவையிரண்டும், உடல்நலம் காப்பவை என மருத்துவர்கள் சொல்கின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

இராம.அழகப்பச் செட்டியார் (6,ஏப்.1909-5,ஏப்.1957) அவர்கள், ஓர் இந்தியத் தொழிலதிபரும், வள்ளலும் ஆவார். இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக, பல கல்வி நிறுவனங்களையும் ஆய்வுக்கூடங்களையும், தனது செலவில் நிறுவி, இந்தியாவில், தமிழகம், கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர். 1947ம் ஆண்டு நடந்த அன்னி பெசன்ட் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு விடுத்த அழைப்பினை ஏற்று, காரைக்குடியில் அழகப்பா கலைக் கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவியவர் இவர். அச்சமயத்தில், அழகப்பா கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்த மாமரம், காய்த்துக் குலுங்கியது. அதைப் பார்த்த கல்லூரி மாணவர் ஒருவர், மாங்காய் கிடைக்கும் என்ற ஆசையில், ஆவேசமாகக் கல் வீசினார், காவலாளர் கையிலும் சிக்கி, தண்டனைக்காக, கல்லூரி நிர்வாகியின் முன்னும் நிறுத்தப்பட்டார்.  ஏன் கல் வீசினாய்? என, அந்த நிர்வாகி கேட்க, இந்த வயதில் மாங்காய் சாப்பிடாமல், எந்த வயதில் சாப்பிடுவது? மாங்காயைப் பார்த்தால், திருடியாவது தின்னத் தோன்றுகிறது என்றார் மாணவர். அப்போது அந்த நிர்வாகி, கண்களில் அன்புபொங்க, அந்த மாணவரைப் பார்த்துவிட்டு, தனது செயலாளரை அழைத்தார். கல்லூரி வளாகம் முழுவதும் மாங்கன்றுகளை நட்டுவிடுங்கள், மாணவர்கள் ஆசை தீரப் பறித்து தின்னட்டும் என்று, செயலாளரிடம் கூறினார், அந்த நிர்வாகி. தண்டனைக்குப் பதில், பெரும் பரிசு தரும் மனத்தைக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல, அவர்தான் அழகப்பச் செட்டியார் அவர்கள். “கோடி கொடுத்த கொடைஞன், குடியிருந்த வீடும் கொடுத்த பெருவள்ளல், களர் நிலமாய்க் கிடந்த காரைக்குடி மண்ணை, கல்வி வளர்நிலமாய் மாற்றிய வள்ளல்” என்றெல்லாம், அழகப்பச் செட்டியார் அவர்கள் பற்றிப் புகழ்ந்து சொல்கின்றனர்.

மருத்துவர் ஹர்ஷிந்தர் கௌர்

வரலாற்றில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், இத்தகைய பல அதிசய மனிதர்களைப் பார்த்து வியப்படைகின்றோம். Dhee Punjab Di அதாவது பஞ்சாப் மாநிலத்தின் மகள்’ என செல்லமாக அழைக்கப்படும், 52 வயது நிரம்பிய மருத்துவர் ஹர்ஷிந்தர் கௌர் (Harshinder Kaur) அவர்கள், பெண் சிசுக்கொலை தடுப்புக்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பன்னாட்டு அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளவர். 2016ம் ஆண்டு, இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கௌரவப்படுத்திய, நூறு பெண் சாதனையாளர்களில் இவரும் ஒருவர். இவர் தனது மருத்துவப் பயணத்தை இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.

நானும்,  மருத்துவரான என் கணவரும் இணைந்து ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குமுன் பஞ்சாப்-ஹரியானா மாநில எல்லையில், மருத்துவ வசதிகள் எதுவும் எட்டிப்பார்த்திராத மிகவும் பின்தங்கிய கிராமத்தில், இலவச மருத்துவ முகாம் நடத்தினோம். அப்போது, சற்று தொலைவிலிருந்து குழந்தை வீறிட்டு அலறும் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தோம். பெரிய குப்பைமேடு ஒன்றில், பச்சிளம் குழந்தை ஒன்றை நாய் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. குழந்தை தனது கடைசி முயற்சியாக அலறிய அந்தக் காட்சியைக் கண்டு, பதறிப்போய், கிராம மக்களிடம் விசாரித்தபோது, ‘ஏழைகளுக்குப் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்ய முடியும்? இங்கு இதெல்லாம் சாதாரணம்’ என்றனர். பஞ்சாப், ஹரியானா மாநில கிராமங்களில், ஏன் நகரங்களிலும் கருவிலே சிசுக்களைக் கொல்வது, இயல்பான நிகழ்வாகவே இருந்தது. ஒவ்வோர் ஊரிலும், கருவின் உடல் மற்றும் சிதைந்த பாகங்களைப் புதைக்க, தனி இடமே இருந்தது. இந்த சமூகக் கொடுமையை முற்றிலும் ஒழிக்க, நானும் என் கணவரும் உறுதிபூண்டோம். அன்றிலிருந்து இன்றுவரை கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகளின் வாழ்வுரிமை குறித்து தேசிய, பன்னாட்டு அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, பல கருத்தரங்குகளில் பங்குகொண்டு எங்களால் முடிந்ததைச் செய்து வருகிறோம். மாதவிடாய், பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பேசுவதே தவறு என்ற எண்ணம், மக்கள் மத்தியில் பரவியிருந்த காலம் அது. குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்குத் தாய்தான் காரணம் என்கிற தவறான எண்ணம், நன்கு படித்தவர்கள் மத்தியில்கூட நிலவியது. இதை விளக்கும் விதத்தில் முதற்கட்டமாக விழிப்புணர்வு முகாம்களை நடத்தினோம். அடுத்து, கிராமப் பஞ்சாயத்துக் கூட்டம், சமய விழாக்கள், சமூக சேவை நிகழ்ச்சிகள், முக்கியமாக, திருமண வீடுகளில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம் என்று சொல்லும், மருத்துவர் ஹர்ஷிந்தர் அவர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் தன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

பெண் சிசுக்கொலை

பெண் குழந்தைகளைக் கொல்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், இன்றுவரை இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண் குழந்தைகளைக் கொல்வது தொடர்கிறது என்பது கசப்பான உண்மை. மகாராஷ்டிர மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தியபோது, சதாரா மாவட்டத்தில், பல பெண் குழந்தைகளுக்கு, ஒரே பெயர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இரண்டு வாரக் கணக்கெடுப்பில் மட்டும், 222 பெண் குழந்தைகளுக்குமேல், ‘நகோஷி’ என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மராட்டிய மொழியில், ‘நகோ’ என்றால், ‘வேண்டாத’ என்று பொருள். ‘ஷி’ என்றால், ‘பெண்’ என்று பொருள். எனவே ‘நகோஷி’ என்றால், ‘வேண்டாத பெண்’ என்று பொருள். குடும்பத்தில் பிறக்கும் மூன்றாவது, நான்காவது பெண் குழந்தைகளை, வேண்டா வெறுப்புடன் வளர்க்கும் கோபத்தில் சூட்டிய பெயர்தான் நகோஷி என்று சொல்லப்படுகின்றது.

பஞ்சாப் மாநிலத்தின், பட்டியாலா அருகில் உள்ள ஒரு கிராமத்தில், கர்ப்பம் தரிக்கும் முறை பற்றி, ஐந்து ஆண்டுகள், தொடர்ந்து பிரச்சாரம் செய்தார் மருத்துவர் ஹர்ஷிந்தர். அதன் விளைவாக, ஆண் பெண் பிறப்பு விகிதத்தில் அங்கு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட பல வருடங்களானாலும் இவர் சோர்ந்துவிடவில்லை. பெண்களின் சட்டப் பாதுகாப்பு குறித்து அறிந்தபின், ஆண்களும் தங்கள் பொறுப்பை உணரத் தொடங்கினர். இப்போது வரதட்சணை ஒழிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்துகிறார் இவர். இதன் பயனாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ‘வரதட்சணை வாங்கமாட்டோம், கொடுக்கவும் மாட்டோம்’ என உறுதிமொழி எடுத்துள்ளனர். ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கென அறக்கட்டளை ஒன்றை 2008ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் நானூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் படிப்பதற்கு பொருளாதார உதவிகளைச் செய்கிறார். `ஒரு பெண்ணின் வாழ்வில் விளக்கேற்றினால், அவளால் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்பதை விளக்கி பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். உலக அளவில் பெண்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக என் வாழ்நாளை அர்ப்பணிக்கத் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் சொல்லியுள்ளார், மருத்துவர் Harshinder Kaur (நன்றி விகடன்).

எத்தனையோ நோயாளிகள், தங்களுக்குக் குணமளித்த மருத்துவர்களைப் பார்த்து, கடவுள்போல் என்னைக் காப்பாற்றினீர்கள், நீங்கள்தான் எனக்குக் கடவுள் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆம். நம் உடல் கண்களால் கடவுளைக் காண முடியாது எனினும், மருத்துவர்கள், கடவுள் போன்று, நமக்குக் குணமளிக்கின்றனர் மற்றும், சிறப்பாக வாழ, வாழ்வை அளிக்கின்றனர்.

இந்திய தேசிய மருத்துவர் நாள்

ஜூலை 01, இத்திங்களன்று, இந்தியாவில், தேசிய மருத்துவர் நாள் கொண்டாடப்பட்டது. நம் வாழ்வில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றும் அனைவரின் முக்கியத்துவம் குறித்தும், மருத்துவர்களின் கடமைகள் மற்றும் அவர்களது பங்கு குறித்தும் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், 1991ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் தேதி, இந்நாள் கொண்டாடப்படுகிறது. நோயாளிகளுக்கும், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் மருத்துவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி சொல்லவும் இந்நாள் அழைப்பு விடுக்கின்றது.  “மருத்துவர்களுக்கு எதிரான எந்த வகையான வன்முறையையும் சகித்துக் கொள்ளக் கூடாது மற்றும் முறைப்படியான மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்” என்ற தலைப்பில், இத்திங்களன்று தேசிய மருத்துவர் நாள் கொண்டாடப்பட்டது.

ஜூலை 1, வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவரான பிதன் சந்திரா ராய் (Dr.Bidhan Chandra Roy) அவர்களின் பிறந்த நாள். இவர், காந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்றி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1948ம் ஆண்டு சனவரி 14ம் தேதி முதல், 1962ம் ஆண்டு ஜூலை முதல் தேதி முடிய, 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகத் திறம்பட செயல்பட்டார். அரசியல் தவிர, மருத்துவத்துறையிலும், பல்வேறு சாதனைகளை படைத்து, இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவராக பணியாற்றியுள்ளார். தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவைகள் பல செய்ததால், பிதன் சந்திரா ராய் அவர்களுக்கு, 1961ம் ஆண்டு, மத்திய அரசு, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. 1882ம் ஆண்டு பிறந்த இவர்,1962ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தனது 80வது வயதில், இறைவனடி எய்தினார். பிதன் சந்திரா ராய் அவர்களின் தன்னலமற்ற சேவையை நினைவுகூரும் வகையில், அவருடைய பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜுலை முதல் தேதியை, `தேசிய மருத்துவர் நாளாக’ இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. மருத்துவத் துறையில், தொடர்ந்து சிறப்பாக சேவையாற்றி வருபவர்களுக்கு, 1976ம் ஆண்டு முதல், `டாக்டர் பி.சி.ராய்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

மனிதரின் உடல் நலத்தோடு உள்ள நலத்திற்கும் புனிதமான பணியாற்றிவரும் மருத்துவர்கள் அனைவருக்கும், நன்றியுடன் நம் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். மனம்விட்டுச் சிரித்தல், நல்ல உறக்கம் ஆகிய இவையிரண்டும், உடல்நலம் காப்பவை என மருத்துவர்கள் சொல்கின்றனர்.

01 July 2019, 15:37