தேடுதல்

Vatican News
இந்தியாவின் முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கலாம் இந்தியாவின் முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கலாம்  

டாக்டர் அப்துல் கலாமின் 4ம் ஆண்டு நினைவு நாள்

மறைந்த முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் ஒவ்வோர் ஆண்டும் பொதுமக்களை இலவசமாக அழைத்து செல்லும், சென்னை ஆட்டோ ஓட்டுனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர், டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை, ஜூலை 27, இச்சனிக்கிழமையன்று, இந்திய நாடே,  நினைவுகூர்ந்து சிறப்பித்தது.

ஏவுகணை மனிதர், அணு சக்தி அறிவியலாளர், மக்கள் ஜனாதிபதி என்று நாட்டு மக்களால் போற்றப்பட்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், 2015ம் ஆண்டின் இதேநாளில், அதாவது, ஜூலை 27, ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றியபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை நாட்டின் முதல் குடிமகன் என்ற அரசுத்தலைவர் பதவியை அலங்கரித்தார் டாக்டர் அப்துல் கலாம். 1998ம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய பொக்ரான் அணுகுண்டு சோதனை வழியாக, அனைத்துலக நாடுகளிடையே இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தவர் மற்றும், பொக்ரான் அணுகுண்டு திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர், டாக்டர் அப்துல் கலாம்.

இதற்கிடையே, மறைந்த முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், ஒவ்வோர் ஆண்டும் பொதுமக்களை இலவசமாக அழைத்துச் செல்லும்,  சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கலைஅரசன் அவர்கள், இந்த ஆண்டும் அப்துல் கலாம் நினைவு நாளில், இன்று காலை முதல் மாலை வரை, இலவச சேவையை மேற்கொண்டார்.

நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வாடகை கொடுத்து, வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தாலும், நல்ல மனிதர் நினைவாக, ஒரு நாள் முழுவதும் இலவச சேவை செய்வதில் மன நிறைவு அடைவதாகத் தெரிவித்துள்ளார், கலைஅரசன்.

27 July 2019, 16:16