தேடுதல்

Vatican News
பிளாக் ஸ்கிம்மர்  தாய்ப் பறவை  தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸை ஊட்டுகிறது பிளாக் ஸ்கிம்மர் தாய்ப் பறவை தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸை ஊட்டுகிறது 

பூமியில் புதுமை: சுற்றுச்சூழல், ஓர் இராட்சத சாம்பல்கலன் அல்ல

கடற்கரைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும், அவை, சிகரெட்டுகளைப் புகைக்கும்போது பயன்படுத்தப்படும், சாம்பல் கலன்கள் அல்ல - புகைப்பட கலைஞர் Karen Maso

மேரி தெரேசா - வத்திக்கான்

அமெரிக்காவில், புளோரிடா நகரின் St.Pete கடற்கரையில், பிளாக் ஸ்கிம்மர் (Skimmer) தாய்ப் பறவை ஒன்று, பசியால் துடித்த தனது குஞ்சுக்கு, சிகரெட் பட்ஸ் ஒன்றை ஊட்டிய புகைப்படம், சமுதாய வலைத்தளங்களில் உலகளவில் மிகுதியாகப் பகிரப்பட்டு வருகின்றது. பறவைகள், சிகரெட் பட்ஸ்களை, உணவென்று எண்ணுவதை, இந்தப் புகைப்படம் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்துகின்றது. இந்தப் புகைப்படத்தை, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள, கரன் மேசன் (Karen Catbird Mason) என்ற பெண் புகைப்பட கலைஞர், கடற்கரைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும், அவை, சிகரெட்டுகளைப் புகைக்கும்போது பயன்படுத்தப்படும், சாம்பல்கலன்கள் அல்ல, நீங்கள் புகைப்பிடிப்பவர்கள் என்றால், சிகரெட் பட்ஸ்களை கீழே போட்டுவிட்டுச் செல்லாதீர்கள், என்றும் எழுதியுள்ளார். கடந்த 39 ஆண்டுகளில் ஆறு கோடிக்கு அதிகமான சிகரெட் பட்ஸ்கள், கடற்கரைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதென புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை மனிதர் மறந்து விடுகின்றனர்.

சிகரெட்டின் உள்ளே இருக்கும் புகையிலையைவிட, அது சுற்றப்பட்டிருக்கும் காகிதமே மிகக் கொடுமையானது. அந்தக் காகிதம் தொடர்ந்து எரிய, உற்பத்தியின்போது 99 விழுக்காடு வேதிய முறைகளைக் கடக்கிறது. புகைப்பிடிப்பது, உயிரையே அச்சுறுத்தும் 25க்கும் அதிகமான நோய்களோடு தொடர்புடையது. ஒருவர் பல ஆண்டுகள் புகைப்பிடித்த பின்னரே, இந்த நோய்களால் தாக்கப்படுகிறார். புகைப்பவருடைய சுவாசம் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது, பற்களைக் கறைபடுத்துகிறது, விரல்களை பழுப்பு-மஞ்சள் நிறமாக்குகிறது. ஆண்மையை இழக்கச் செய்கிறது. மேலும், விரைவிலேயே முகத்தில் சுருக்கங்களும் தோல் சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகலாம். புகைப்பிடித்தல், புகைப்பவரை மட்டுமல்லாமல், மற்றவரையும் பாதிக்கிறது. எனவே புகைப்பதைப் பகைப்போம்.

04 July 2019, 15:13