தேடுதல்

Vatican News
இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் திருவாளர் கதிர்வேல் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் திருவாளர் கதிர்வேல் 

பூமியில் புதுமை – வெளிநாட்டுப் வேலையை உதறி, வேளாண்மை

கடலூர் மாவட்டத்தின் வள்ளிமதுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்ற இளைஞர், வெளிநாட்டுப் வேலையை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தின் வழியே, அக்கிராமத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கடலூர் மாவட்டத்தின் வள்ளிமதுரம் கிராமத்தில், அண்மைய ஆண்டுகளாக, விவசாயம் பொய்த்துப்போனதால், நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் மக்கள் புலம்பெயர்ந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்ற இளைஞர், தான் செய்துகொண்டிருந்த வெளிநாட்டுப் வேலையை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தின் வழியே, அக்கிராமத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

கதிர்வேல் அவர்களின் வயலில், மஞ்சளும், ஊடுபயிராக வெங்காயமும் பயிரிட்டப்பட்டிருந்தன. மழையின்மையால் ஈரம் கண்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், அவ்வயல், பசுமையாகவும், அடிமண் காய்ச்சல் இன்றியும் காணப்படுகிறது. “இதுவே இரசாயன உரம் போட்ட வயலாக இருந்தால், அந்த உப்பின் வெப்பத்தில், பயிர்கள் இந்நேரம் காய்ந்து போயிருக்கும். 3 வருடமாக மாட்டு எருவில் உரமூட்டிய வயல், இப்போது மழை தள்ளிப்போனாலும், பயிர்களைப் பாதுகாத்து வருகிறது” என்று கூறியபடி, வெங்காயப் பயிரின் தழைகளைக் கோதிவிடுகிறார், கதிர்வேல்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஆடு மாடு வளர்ப்பு, வயல்வெளி வாசம் என வளர்ந்த கதிர்வேல் அவர்களுக்கு, இளவயது முதல், வேளாண்மையில் ஈடுபாடு அதிகம். ஆனால் நடைமுறையில், உழைப்புக்கேற்ற பலன் இல்லாததால், தொழில் கல்வி பட்டயப் படிப்பு முடித்ததும், ஊரில் மற்றவர்கள் செய்ததுபோல், இவரும், பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்றார்.

ஏழு வருடம் கழித்து ஊர் திரும்பியவர், வயலில் முழுமனதோடு களமிறங்கினார். வெளிநாட்டில் உழைத்துச் சேமித்ததையெல்லாம், தனக்குச் சொந்தமான வயலில் முதலீடு செய்தார். கூடுதலாக நிலம் வாங்கி, 2 கிணறுகளுடன் 10 ஏக்கருக்கு விவசாயப் பரப்பை அதிகரித்தார். 40 மாடுகளை வளர்த்து, அவற்றின் வழியே கிடைக்கும் இயற்கை உரத்தால், வயலுக்கு உயிர் சேர்த்தார்.

சொந்த நிலம் மட்டுமன்றி, குத்தகை நிலங்களையும் சேர்த்துக்கொண்டு, தற்போது, 35 ஏக்கரில், இயற்கை விவசாய முயற்சிகளை மேற்கொள்கிறார், கதிர்வேல். “எல்லா வயல்களையும் திருத்தி, ஏரிகளில் இருந்து வண்டல் மண் அடிச்சு உயிரூட்டினேன். என்னோட சொந்த நிலத்தில், செலவில்லாத இயற்கை விவசாயத்தை, மக்களுக்கு, காட்சி பொருளாக்கினேன். இப்போ, கணிசமான இளைஞர்கள் விவசாயத்துக்குத் திரும்பி வர்றாங்க. என்னோட மாட்டுப் பண்ணையையும் அதில் கிடைக்கும் வருமானத்தையும் பார்த்துட்டு, வீட்டுக்கு வீடு, கறவை மாடுகள் வளர்க்க ஆரம்பிச்சிருக்காங்க” என்று பெருமிதப்படுகிறார், இளம் விவசாயி, கதிர்வேல். (ஆதாரம்: தி இந்து தமிழ் திசை)

16 July 2019, 14:42