தேடுதல்

Vatican News
குழந்தைகளின் நலவாழ்வு குழந்தைகளின் நலவாழ்வு  (AFP or licensors)

கருவுற்ற நிலை, குழந்தை பிறப்பு தொடர்புடைய மரணங்கள்

பிறந்த ஒரு மாதத்திற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, ஏறத்தாழ 7000 என்ற அதிர்ச்சித் தகவலை, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருவில் குழந்தையைத் தாங்குதல் தொடர்புடைய நலப்பிரச்சனைகளால், ஒவ்வொரு நாளும், 800க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்துவருவதாக, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், தன் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளது.

கருவுற்ற நிலை மற்றும் குழந்தை பிறப்பு தொடர்புடைய நலப்பிரச்சனைகளால் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை, 800க்கும் அதிகம் என்றும், இவர்களில் பலர் 15க்கும், 19க்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்கள் என்றும் யூனிசெஃப் தன் அறிக்கையில் கூறியுள்ளது.

இளம்பெண்களின் மரணத்திற்கு, கருவுற்ற நிலையும் குழந்தை பிறப்பும் முக்கிய காரணம் என்று கூறும் யூனிசெஃப்பின் அறிக்கை, பிறந்த ஒரு மாதத்திற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, ஏறத்தாழ 7000 என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது.

2010ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு முடிய யூனிசெஃப் அமைப்பினர் நடத்திய கணிப்பின்படி, மொசாம்பிக், எத்தியோப்பியா போன்ற நாடுகளில், 10,000 மக்களுக்கு, 3 முதல் 9 என்ற எண்ணிக்கையில், நலப்பணியாளர்கள் உள்ளனர் என்றும், நார்வே போன்ற நாடுகளில், அதே 10,000 மக்களுக்குப் பணியாற்றும் நலப்பணியாளர்களின் எண்ணிக்கை 213 முதல், 228 என்றும் தெரியவந்துள்ளது.

ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரீபியன் பகுதிகளில் வாழும் குடும்பங்களில், 50 இலட்சத்திற்கும் மேற்பட்டவை, தங்கள் வருமானத்தில், உணவுக்குப் போக, மீதியிருக்கும் தொகையில், 40 விழுக்காட்டை, தாய்மை தொடர்புடைய நலப்பணிகளுக்கென செலவிட வேண்டியுள்ளது என்று, யூனிசெஃப் அறிக்கை மேலும் கூறுகிறது.

03 June 2019, 16:08