தேடுதல்

Vatican News
பசுமை இல்லத்தில் விளையும் காய்கறிகள் பசுமை இல்லத்தில் விளையும் காய்கறிகள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : சோர்ந்துவிடாதே, வெற்றி நிச்சயம்

இயற்கை காய்கறிகள், வேதிய உரம் பாதிப்பு பற்றி வெளியான கருத்துக்கள் எங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருவண்ணாமலையில், சுபாஷ் பாலேக்கர் அவர்கள் நடத்திய பயிற்சியில் கலந்துகொண்ட உடனேயே நாட்டு மாடுகள் வாங்கிவிட்டோம், என்று சொல்கின்றனர், புதுப்பாளையம் கிராமத்தின் நடராஜன் - அனுராதா தம்பதியர்.

“2013-ம் ஆண்டு இந்த நிலம் கிடைத்தது. இது கரடு முரடான சரளை மண்ணாக இருந்தது. நிலத்தைச் சமன்படுத்தி விவசாயம் செய்ய எங்களுக்கு ஓராண்டு ஆனது. முதல் முதலாக, கிச்சலிச் சம்பாவும், சீரகச் சம்பாவும் பயிர் செய்தோம். அப்போது இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி, இரண்டு ஏக்கரில் முதல்முறையாகப் பயிர் செய்தோம். இரண்டு ஏக்கரில், முதல் போகம் 18 மூட்டை கிடைத்தது. அப்போது ஊர்க்காரர்கள் எல்லாம் எங்களை முட்டாளைப் பார்க்கிற மாதிரி பார்த்தார்கள். நாங்கள் எதற்கும் கவலைப்படவில்லை. கரடு முரடாகக் கிடந்த நிலத்திலேயே 18 மூட்டை கிடைத்தது மனதிற்கு மகிழ்வைக் கொடுத்தது. அதனால் அடுத்தமுறையும், இரண்டு ஏக்கரில் கிச்சலிச் சம்பா, சீரகச் சம்பா நெல்லை விதைத்தோம். பின் ஒரு ஏக்கருக்கு 18 மூட்டை கிடைத்தது. இந்த முறை ஊர்க்காரர்களின் பார்வை கொஞ்சம் எங்கள்மேல் விழ ஆரம்பித்தது. நாங்கள் பயன்படுத்தும் ஜீவாமிர்தத்தையும், மாட்டு எருவையும் மதிக்க ஆரம்பித்தார்கள் என்றுகூடச் சொல்லலாம். அப்போது ஆரம்பித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்துகொண்டு வருகிறோம். அதனால் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கலந்துகொள்கிறோம். 2018ல் ஏக்கருக்கு இருபது மூட்டை மகசூல் கிடைத்தது. அடுத்ததாக, காய்கறிகளையும் பயிர் செய்யலாம் என்று தோன்றியது. அதற்காக ஏழு சென்ட்டில், பந்தல் வைத்து புடலை, பாகை என, இரண்டு காய்கறிகளையும் நடவு செய்திருக்கிறோம். அதில் முறையான இலாபம் வர ஆரம்பித்துவிட்டது. முதலில் ஆறு கிலோ அறுவடை ஆனது. இப்போது 25 கிலோ வரைக்கும் அறுவடை ஆகிக்கொண்டு இருக்கிறது. மூன்று நாளைக்கு ஒருமுறை பறித்துக்கொண்டு இருக்கிறோம்" என்று சொல்கின்றனர் நடராஜன் - அனுராதா தம்பதியர். (விகடன் இதழ்)

12 June 2019, 15:02