தேடுதல்

Vatican News
கஜா புயலில் சாய்ந்த மரங்கள் கஜா புயலில் சாய்ந்த மரங்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை – மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் இளையோர்

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் பாலைவனமாக மாறிய எங்கள் பகுதி மட்டுமல்ல எல்லாப் பகுதியும் பசுமையாக மாற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்

மேரி தெரேசா - வத்திக்கான்

கடந்த ஆண்டில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில், தமிழகத்தின் பல இடங்களில் பல இலட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்த வெப்பத்தைத் தணிப்பதற்கென, பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சிப் பகுதி இளையோர் இணைந்து, ‘உயிர்' என்ற அமைப்பினை உருவாக்கி, அப்பகுதி மக்களுக்கு, மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவதோடு, ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும், மரக்கன்றுகளை நடவும் செய்கின்றனர். இந்த நடவடிக்கை குறித்து, அந்த அமைப்பைச் சேர்ந்த பாலகுமரன் என்பவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். 

``கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் எங்கள் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதோடு இலட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. விண்ணை நோக்கி உயர்ந்து நின்ற தென்னை மரங்களும் பாதியோடு முறிந்தும், வேரோடும் சாய்ந்தன. மரங்கள் விழுந்ததால் சோலைவனம்போல் பசுமையாக இருந்த எங்கள் கிராமம், மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், இன்று பாலைவனம்போல் வறண்டு காட்சியளிக்கின்றன. மரங்கள் இல்லாததால், இந்தக் கோடையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. தமிழகத்தின் பல ஊர்களில் மழை இருக்கும் நிலையில், தஞ்சை மாவட்டத்தில் துளி மழைகூட பெய்யவில்லை. மரங்கள் இல்லாமல்போனதால் மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகளும் கடுமையாய் அவதிக்கு உள்ளாகியுள்ளன. மரங்கள் இல்லாமல்போனதே இதற்கு முக்கிய காரணம் என்பதால், இளையோர் சேர்ந்து மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்தோம். அதன்படி எங்கள் ஊர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் மரக்கன்றுகளை கொடுக்கிறோம். மேலும் வீட்டுக்கு முன்பு மரக்கன்றுகளை நட்டும் வைக்கிறோம். முதற்கட்டமாக, புங்கை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை 250 குடும்பங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அதோடு, இந்த மரக்கன்றுகளை குழந்தைபோல் கவனித்து வளர்த்துவிட வேண்டும் என அனைவரிடத்திலும் அன்போடு கோரிக்கையும் வைக்கின்றோம். புயல் ஏற்படுத்திய பாதிப்பில் பாலைவனமாக மாறிய எங்கள் பகுதி மட்டுமல்ல, எல்லாப் பகுதியும் பசுமையாக மாற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் (கே.குணசீலன் அரவிந்த், விகடன்) 

17 June 2019, 15:27