தேடுதல்

Vatican News
கைம்பெண் விவசாயி  பேச்சியம்மாள் கைம்பெண் விவசாயி பேச்சியம்மாள் 

பூமியில் புதுமை - கைம்பெண் விவசாயியின் சாதனை

இந்தியாவில், தற்போது ஏறத்தாழ அறுபது கோடிப்பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையால் இன்னலுறுகின்றனர். ஆண்டுதோறும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி உயிரிழக்கின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

கடந்த 17 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும், முப்பது கி.மீட்டர் தூரம் பயணம் செய்து, 25 ஏக்கர் தோப்பைப் பாரமரித்து வருகிறார், கைம்பெண் விவசாயி பேச்சியம்மாள். செக்கானூரணி அருகேயுள்ள பூச்சம்பட்டியில், இவருக்குச் சொந்தமாக 25 ஏக்கர் விளைநிலம் உள்ளது. அதில், கண்மாய்ப்பகுதியில் 1,100 தென்னைகள், மேட்டுப் பகுதியில் தேக்கு, மா மற்றும், முருங்கை மரங்கள், வயல் பகுதிகளில் கத்திரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிச் செடிகள் என, பார்க்கும் இடமெல்லாம் பசுமையைப் பரவ விட்டிருக்கிறார் பேச்சியம்மாள். இவர், மதுரை நகரிலுள்ள தன் வீட்டிலிருந்து, ஒவ்வொரு நாளும், பேருந்தில் ஏறி, முப்பது கி.மீ தூரம் பயணித்து, தனது விளைநிலத்திற்குச் சென்று, விவசாயத்தைக் கவனித்து வருகிறார். இவர், இரண்டு மகன்கள், ஒரு பெணு என, மூன்று பிள்ளைகளின் தாய். இவரது மகள் பிறந்தபோது, கணவர், இந்த 25 ஏக்கர் நிலத்தை ஆசையோடு வாங்கி, இதிலுள்ள ஒவ்வொரு செடியையும் கண்ணும் கருத்துமாக வளர்த்துள்ளார். இவரது மகளுக்கு எட்டு வயதானபோது, கணவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்றிலிருந்து தனது கணவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, கடந்த 17 ஆண்டுகளாக, வீடு, நிலம், தோப்பு மற்றும், பிள்ளைகளை பேச்சியம்மாள் அவர்களே, பாரமரித்து வருகிறார். தனது நிலத்தில் எந்தச் செடியாயிருந்தாலும் மாட்டுச்சாண உரத்தைத்தான் இவர் பயன்படுத்துகிறார். இவரது தோப்பில் காய்கறிச் செடிகளில் களையெடுப்பது மற்றும், காய் பிடுங்கும் வேலைகளை, பெண்களும்,  பழ மரங்கள் வேலைகளை ஆண்களும் செய்கின்றனர். மதுரை வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து, இவரது விளைநிலத்தில் வேலை செய்யும் எல்லாருக்கும் அதைப் பகிர்ந்து கொடுக்கிறார் பேச்சியம்மாள். இந்த வறண்ட பூமியில் விவசாயத்திற்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது என்று கவலையோடு விகடன் குழுமத்திடம் சொல்லியுள்ளார், 55 வயது நிரம்பிய விவசாயி பேச்சியம்மாள்.

இந்தியாவில், ஆண்டுதோறும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி உயிரிழக்கின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்தால், 2050ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில், ஆறு விழுக்காடு அளவுக்குத் தண்ணீர்ப் பிரச்சனையால் பாதிப்பு ஏற்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன (நன்றி விகடன்)

03 June 2019, 16:08