தேடுதல்

Vatican News
எவரெஸ்ட்டில் போக்குவரத்து நெரிசல் எவரெஸ்ட்டில் போக்குவரத்து நெரிசல் 

வாரம் ஓர் அலசல் - இயற்கையும் மனிதரும்

2017ம் ஆண்டைவிட, 2018ம் ஆண்டில், உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆறு விழுக்காடு அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் ஏறத்தாழ 140 கோடிப் பேர் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்- உலக சுற்றுலா நிறுவனம்

மேரி தெரேசா - வத்திக்கான்

புதிய புதிய இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும், இயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் விடுமுறையைச் செலவிட வேண்டும், சாகங்களைப் புரிய வேண்டும் என்ற ஆர்வம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அண்மைக் காலங்களில், மக்கள் மத்தியில் பரவலாக அதிகரித்துள்ளது. வலுவான பொருளாதார வளர்ச்சி, வருமானத்திற்கேற்ற விமானப் போக்குவரத்துகள், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிய புதிய தொழில்கள், விசா வசதிகள் போன்றவையும், மக்களில் சுற்றுலாப் பயணங்களை அதிகரித்துள்ளன. 2017ம் ஆண்டைவிட, 2018ம் ஆண்டில், உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆறு விழுக்காடு அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் ஏறத்தாழ 140 கோடிப் பேர் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என, உலக சுற்றுலா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் மட்டும், 10 கோடி இந்தியர்கள், உள்நாட்டு சுற்றுலாவையும், ஐந்து கோடி இந்தியர்கள் வெளிநாட்டு சுற்றுலாவையும் மேற்கொண்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் குப்பைகள், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகின்றன. உலகின் மிக உயரமான, அழகிய பனிபடர்ந்த எவரெஸ்ட் மலையும்கூட, குப்பைகளால் நிறைந்துள்ளன. ஆக்சிஜஸன் பாட்டில், உணவு பொருட்கள், மருத்துவ உபகரணம் என, மலையேற்ற வீரர்கள், தாங்கள் எடுத்துச் செல்லும், அடிப்படைப் பொருள்களையெல்லாம் பயன்படுத்திவிட்டு, மலைப்பகுதியிலேயே வீசிவிட்டு வந்து விடுவதால் எவரெஸ்ட் சிகரத்தில், 25 டன்களுக்கும் மேலாக குப்பைகள் குவிந்துள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எவரெஸ்ட்டில் குப்பை

1953ம் ஆண்டு மே 29ம் தேதி, எட்மண்ட் ஹிலரி (Edmund Hillary) அவர்களும், டென்சிங் நார்கே (Tenzing Norgay Sherpa) அவர்களும், எவரெஸ்ட் உச்சியைத் தொட்டதிலிருந்து, ஆயிரக்கணக்கான சாகச விரும்பிகள் எவரெஸ்ட் உச்சிக்கு ஏறத் தொடங்கியுள்ளனர். இந்த சாகசப் பயணத்தை, ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 300 மலையேற்ற வீரர்களும், அதே எண்ணிக்கையில், ஷெர்பா இன வழிகாட்டிகளும் மேற்கொள்கின்றனர். மலையேறும் வழியில், கழிப்பிட வசதிகள் இல்லாததால், மனிதக் கழிவுகளும், அவர்கள் வீசும் குப்பைகளும் சேர்ந்து, எவரெஸ்ட்டில் துர்நாற்றம் வீசுவதாகவும் சொல்லப்படுகின்றது. எனவே, நேபாள அரசு, “எவரெஸ்ட்டை சுத்தப்படுத்தும் பணி" என்ற திட்டத்தின்கீழ், 45 நாட்களில், பத்தாயிரம் கிலோ குப்பைகளை அகற்ற திட்டமிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி, நேபாள இராணுவம், இப்பணியைத் தொடங்கியது. தற்போது ஐந்தாயிரம் கிலோ குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்று, மே 10ம் தேதி வெளியான செய்திகள் கூறுகின்றன.

உலகம் முழுவதும் மலையேற்றம் மேற்கொள்வது மக்களிடையே பிரபலமடைந்து வருவதால், அண்மைக் காலமாக, எவரெஸ்டிலும் கூட்டம் அலைமோதுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெருநகரங்களில்தான் போக்குவரத்து நெரிசல் என்றால், எவரெஸ்டிலும் கடந்த வாரத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஏழு பேர் பலியாகியுள்ளனர். மலையேற்ற வீரரான நிர்மல் பூர்ஜா (Nirmal Purja) அவர்கள், சமூக வலைத்தளங்ளில் வெளியிட்டுள்ள புகைப்படம் வழியாக, எவரெஸ்ட் மலையேற்றம் குறித்த மேலும் பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. 8,848 மீட்டர் உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட்டை அடைவதற்குமுன் உள்ள கடைசி நிறுத்தமான ஹிலாரிக்கும் (8,790 மீட்டர்), எவரெஸ்ட் உச்சிக்கும் இடையே மட்டும் 350க்கும் மேற்பட்ட மக்கள் இருந்திருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. எவரெஸ்டில் ஏறுவதற்கு இந்த ஆண்டு மொத்தம் 381 பேருக்கு நேபாள அரசு அனுமதி தந்திருக்கிறது. மோசமான வானிலையின் காரணமாக இம்முறை ஏறும் நாள்கள் குறைந்திருக்கின்றன. இதனால் அனைவரும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் ஏற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இதுவரை, இரு இந்தியர் உட்பட ஏழு பேர் இறந்துள்ளனர். 12 மணிநேரத்துக்கும் மேல் நெரிசலில் சிக்கியதால் மூச்சுத் திணறலில் ஒருவர் பலியாகியுள்ளார். இதில் பலரும் திரும்பி கீழே வரும்போது பலியாகியிருக்கின்றனர். மலையேற்ற வீரர்கள், எவரெஸ்ட் உச்சியை அடைவதற்கு, சிலநேரங்களில், 20 நிமிடம் முதல், 1.5 மணி நேரம்கூட காத்திருக்க வேண்டியிருக்கும், இது காலநிலையைப் பொறுத்தது என்றும் சொல்லப்படுகின்றது.

IPBES அறிக்கை

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியையும், அதில் வாழ்கின்ற அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டும், இல்லையெனில், உலகம், கடும் அழிவினை எதிர்கொள்ள நேரிடும் என, அண்மைக் காலமாக, மனிதநல ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். உயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் சூழலியல் குறித்து, அரசுகளுக்கு இடையேயுள்ள அறிவியல் கொள்கை (The Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services : IPBES) என்ற அமைப்பு, கடந்த ஏப்ரல் 29ம் தேதியிலிருந்து மே 4ம் தேதி வரை, பாரசில் நடத்திய பன்னாட்டு ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐம்பது நாடுகளைச் சேர்ந்த 145 வல்லுனர்கள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து தயாரித்த அறிக்கை, இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மனித வரலாற்றில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உலக அளவில் இயற்கையும், உயிரினங்களும் பெருமளவில் அழிந்து வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இந்தப் பூமியில் வாழ்ந்துவரும், பத்து இலட்சம் உயிரினங்கள் முற்றிலும் அழியும் ஆபத்தில் உள்ளன. உலக அளவில், நம் பொருளாதாரங்கள், வாழ்வாதாரங்கள், உணவுப் பாதுகாப்பு, நலவாழ்வு மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையையே மனிதர் அழித்து வருகின்றனர். ஆயினும், உள்ளூர் மற்றும் உலக அளவில், எல்லா நிலைகளிலும், இப்போதே நடவடிக்கைகளைத் தொடங்கினால், இந்த அழிவைக் குறைக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையை வெளியிட்ட, IPBES அமைப்பின் தலைவர் இராபர்ட் வாட்சன் (Sir Robert Watson) அவர்கள் கூறியுள்ளார். இயற்கையின் அழிவு என்பது, மனிதகுலத்தின் அழிவுதான், ஏனெனில் இயற்கை வளங்களை எந்த தொழில்நுட்பத்தினாலும் ஈடுசெய்ய முடியாது. இயற்கை வளங்களின் துணையின்றி மனிதகுலம் வாழ்வதும் சாத்தியமில்லை என, இயற்கையின் பலன்களை, விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது இந்த அறிக்கை.

சுற்றுச்சூழல் மனிதரே காரணம்

நிலத்தை அடிப்டையாகக் கொண்ட சுற்றுச்சூழலில், நான்கில் மூன்று பகுதியும், கடல்சார்ந்த சுற்றுச்சூழலில், ஏறத்தாழ 66 விழுக்காடும் மனிதர்களின் செயல்பாடுகளால், பெருமளவில் மாற்றம் கண்டுள்ளன. உலகின் மூன்றில் ஒரு பகுதிக்கு அதிகமான நிலப்பரப்பும், ஏறத்தாழ 75 விழுக்காட்டு சுத்தமான நீர்வளங்களும், தனது இயல்பான தன்மையைனை இழந்துவிட்டன. 85 விழுக்காட்டு ஏரி, குளம் போன்ற நீராதாரங்கள் காணாமல்போய்விட்டன. 2016ம் ஆண்டில், உணவிற்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்ட 6,190 வகையான வளர்ப்பு நாட்டு விலங்கினங்களில் 55 வகையான நாட்டுரக விலங்கினங்கள் அழிந்து விட்டன. 1000க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. 1970ம் ஆண்டிற்குப்பின், வேளாண்மை அறுவடையின் மதிப்பு, ஏறத்தாழ 300 விழுக்காடும், மரங்கள் அறுவடை 45 விழுக்காடும் அதிகரித்து, ஒவ்வோர் ஆண்டும், உலக அளவில், புதுப்பிக்கக்கூடிய மற்றும் புதுப்பிக்கப்பட முடியாத ஏறத்தாழ ஆறாயிரம் கோடி டன்கள் சுரண்டப்படுகின்றன. இவை, 1980ம் ஆண்டிற்குப்பின், ஏறத்தாழ இருமடங்காகியுள்ளன. 1992ம் ஆண்டிலிருந்து நகர்ப்புறங்களும் இருமடங்குக்குமேல் விரிவடைந்துள்ளன. 1980ம் ஆண்டிலிருந்து, பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் மாசுகேடு பத்து மடங்காக அதிகரித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கடலில் கொட்டப்படும் மற்றும் கடலுக்குச் செல்லும், 30 கோடி முதல், 40 கோடி வரையிலான பிளாஸ்டிக் பொருள்களால், பெருங்கடல்களில், 400க்கும் அதிகமான இடங்கள், ஆபத்தான மரணப் பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 2,45 ஆயிரத்துக்கும் அதிகமான சதுர கிலோ மீட்டர் நீர்ப்பரப்பு, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 66 விழுக்காட்டு கடல்பகுதி பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது.

மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இயற்கை அமைப்புகள், பல்வேறு உயிரினங்கள், பழங்குடி இனத்தவர் என, எல்லாமுமே அழிவை சந்திக்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது. மனிதர்கள் மேற்கொண்டுள்ள, முறையான திட்டமிடப்படாத வளர்ச்சித் திட்டங்களும், தொழில்நுட்பங்களும், அதிகப்படியான நுகர்வுத்தன்மையும், இயற்கை வளங்களை நியாயமாகப் பகிர்ந்து கொள்ளப்படாத சுரண்டல் மனப்பான்மையுமே,  இவற்றுக்கு முக்கிய காரணம் என்று, IPBES அமைப்பின் அறிக்கை கூறுகின்றது. இதனால், உலக அரசுகள் ஒன்றிணைந்து, நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்த அறிக்கை அழைப்பு விடுக்கின்றது.. (நன்றி பிபிசி தமிழ்). மகாத்மா காந்தி அவர்கள் சொல்லியிருப்பதுபோல, இயற்கையால் மனிதரின் தேவைகளை மட்டுமே நிறைவு செய்ய இயலும். மாறாக, மனிதரின் பேராசையை இயற்கையால் நிறைவு செய்ய இயலாது என்பதை நினைவில் இருத்துவோம்.

திருந்தவேண்டியது யார் ?

மாணவன் ஒருவன் திருடுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தான். அன்று அவன் வகுப்பில் கையும் களவுமாக பிடிபட்டான். அவனை, மற்ற மாணவர்கள், வகுப்பு ஆசிரியர் சிவகுரு அவர்கள் முன் நிறுத்தினர். திருடிய மாணவனிடம், ‘திருடுவது குற்றம் என்று தெரியாதா?” என கேட்டார் ஆசிரியர். உடனே அவன், ஐயா, இனிமேல் திருடமாட்டேன் என்று உறுதியளித்தான். அதனால் அவனை மன்னித்தார் ஆசிரியர். ஒரு வாரத்தில், மீண்டும் அந்த மாணவன் கைவரிசையைக் காட்ட, மற்ற மாணவர்கள் அவனைப் பிடித்தனர். இந்த முறை அவனை மன்னிக்காமல், பள்ளியிலிருந்து வெளியேற்றுமாறு மாணவர்கள் வற்புறுத்தினர். ஆனால் சிவகுரு அவர்கள், இப்போதும் அவனிடம், ‘திருடுவது குற்றம் என தெரியாதா?” என்று கேட்டார். அப்போது மற்ற மாணவர்கள் “திருடிய இவனை வெளியேற்றாவிட்டால், நாங்கள் வெளியேறுவோம்” என்று குரல் எழுப்பினர். ஆசிரியரும், “நல்லது. நீங்கள் அனைவரும் செல்லலாம்” என்றார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சிவகுரு அவர்கள், “நல்லது, கெட்டதை விளங்கச் செய்வதே கல்வி. அதை அறிந்த நீங்கள் எங்குச் சென்றாலும் நல்வழியில் நடப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் திருடுவது குற்றம் என அறியாத இவனுக்குத்தான் நிறையப் போதிக்க வேண்டியிருக்கிறது” என்றார். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என, அதைத் திருடுகின்றவர்களுக்குத் தொடர்ந்து, அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. காலநிலை மாற்றமும் பலவழிகளில் பாடம் புகட்டி வருகிறது. இவர்கள் விரைவில் திருந்தி, நம் பொதுவான இல்லத்தை வருங்காலத் தலைமுறைகளுக்குப் பாதுகாப்பாக இட்டுச்செல்வார்கள் என நம்புவோம். பாடம் புகட்டவேண்டிய நிலையில் இவர்கள் உள்ளார்கள். அதேநேரம், இயற்கையைப் பாதுகாப்பதில், தனிநபரக்ளாக நம் ஒவ்வொருவரின் கடமை என்ன?

வாரம் ஓர் அலசல் - இயற்கையும் மனிதரும்
27 May 2019, 15:36