தேடுதல்

Vatican News
இயற்கை உரத்தால் செழித்திருக்கும் வயல் இயற்கை உரத்தால் செழித்திருக்கும் வயல் 

பூமியில் புதுமை : விவசாயத்தில், கல்வியறிவுடைய இளையோரின் ஈடுபாடு

இயற்கை விவசாய முறையும், இளையோரின் முயற்சியும் ஒன்றாக இணைந்து சரியாக செயல்படுமாயின், தோல்வி என்ற சொல்லே மறைந்து வெற்றி ஒன்றே இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அண்மைக்காலத்தில், கேரளாவில், படித்த கல்வியறிவுடைய இளையோர் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் விவசாயத்தில் முன்னேறி வருகின்றனர். இது விவசாயத்தின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது என்று கூறலாம். இயற்கை விவசாய முறையும், இளையோரின் முயற்சியும் ஒன்றாக இணைந்து, சரியாகச் செயல்படுமாயின், தோல்வி என்ற சொல்லே மறைந்து வெற்றி ஒன்றே இருக்கும்.

ராய் தாமஸ் அவர்கள், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சார்ந்த படித்த விவசாயி. இவர் அனைவரின் முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். இவர், தனது எட்டு ஏக்கர் நிலத்தில் 120 தென்னைகளும், 400 அரிக்கா மரங்களும் 100 கோக்கோ செடிகளையும் வளர்க்கிறார். இதன் மூலம், இவருக்கு வருமானமாக ஆண்டுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் கிடைக்கிறது.

தென்னை மரங்களில் ஏறத்தாழ 50 மிளகுக் கொடிகளை ஊடுபயிராகப் படரவிட்டுள்ளார். மேலும், வாழை, மஞ்சள், இஞ்சி ஆகியவையும் ஊடுபயிராக வளர்க்கிறார். கொட்டகை அடைத்து அதில் முயல் வளர்க்க ஆரம்பித்தார். இதில் இரண்டு விதமாக, கொட்டகையை வடிவமைத்தார். மேலும், இரண்டு, கோழி வளர்ப்பு பண்ணைகளையும் அமைத்துள்ளார். அலங்காரமாக வளர்க்கும் பறவைகளுக்கென கொட்டகை அமைத்து பறவைகளை வளர்த்து, விற்று அதன் வழியாகவும் வருமானம் ஈட்டுகிறார். இது மட்டுமின்றி, பறவைகளின் கழிவுகள் மற்றும் இலைச் சருகுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து நிலங்களுக்கு பயன்படுத்துகிறார். மேலும், முயலின் கழிவினைக் கொண்டு, வீட்டுப் பயன்பாட்டிற்கான எரிவாயு தயாரிக்கிறார்.

இவ்வாறான பல கலப்புப் பண்ணை திட்டத்தின் காரணமாக, கேரள அரசின் வேளாண் துறை, இவருக்கு “சிறந்த விவசாயி” எனும் விருதினைத் தந்து சிறப்பித்துள்ளது.

29 May 2019, 15:19