தேடுதல்

Vatican News
குவித்து வைக்கப்ட்டுள்ள சோளம் குவித்து வைக்கப்ட்டுள்ள சோளம் 

ஒவ்வோர் ஆண்டும் 130 கோடி டன் உணவு வீணாகிறது

தேவைக்கு அதிகமாக உணவை தயாரிப்பதும், அவற்றை, பயன்படுத்தாமல் வீணடிப்பதும் பெருமளவான ஆற்றல் வீணடிப்புக்கு இட்டுச் செல்லும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், ஜப்பானில் மட்டும், 60 இலட்சம் டன் எடையுள்ள உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுவதாக, தன் கவலையை வெளியிட்டுள்ளது, அந்நாட்டு அரசு.

ஜப்பானில் உள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் குடும்பங்கள், தங்கள் வாழ்க்கை முறையையும், உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றுவதன் வழியாக, உணவு வீணடிக்கப்படுவதை குறைக்கவேண்டும் என அந்நாட்டு அரசு விண்ணப்பித்துள்ளது.

தேவைக்கதிகமாக உணவை தயாரிப்பதும், அவற்றைப் பயன்படுத்தாமல் வீணடிப்பதும்,  பெருமளவான ஆற்றல் வீணடிப்புக்கு இட்டுச் செல்லும் என்பதை மனதில்கொண்டு, 2030ம் ஆண்டுக்குள் பொருள்கள் வீணடிக்கப்படுவதை 50 விழுக்காடு குறைப்பதற்கு திட்டமிட்டுச் செயலாற்றி வருகின்றது, ஜப்பான் அரசு.

ஐக்கிய நாடு நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கூற்றுப்படி, உலகில் 81 கோடியே 50 இலட்சம் மக்கள் போதிய உணவின்றி வாடும் நிலையில், ஒவ்வோர் ஆண்டும் உலகில் 130 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகின்றது.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமையன்று ஐரோப்பிய உணவு வங்கிகள் கூட்டமைப்பின் ஏறத்தாழ இருநூறு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உணவு வீணாக்கப்படுவதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் இவ்வமைப்பினர் ஈடுபட்டு வருவது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 May 2019, 15:52