தேடுதல்

Vatican News
இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள கரூர் இளைஞர் ராசகணபதி இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள கரூர் இளைஞர் ராசகணபதி  

பூமியில் புதுமை – இயற்கை விவசாயத்தில் ஆர்வம்

என்னைப் பார்த்து, நாலு பேர் இயற்கை விவசாயத்திற்கு திரும்பினாலே போதும். அவர்களைக் கொண்டு, இந்தப் பகுதி விவசாயிகளையே இயற்கை விவசாயத்திற்குத் திருப்பிவிடுவேன் என்பதில் உறுதியுடன் இருக்கிறார் ராசகணபதி

மேரி தெரேசா – வத்திக்கான்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கின்ற மணல்மேடு கிராமம், கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் 7-யொட்டி இருப்பதால், இங்கு நிலத்தின் மதிப்பு அதிகம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராசகணபதி அவர்களுக்கு, அந்தச் சாலையையொட்டி இரண்டு ஏக்கர் நிலமிருக்கிறது. அந்த நிலத்தைச் சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் கட்டடங்கள் கட்டுவதற்குரிய இடங்களாக மாறியுள்ளன. அதனால், இவரது நிலத்தையும் அவ்வாறு அமைக்க, பலர் ஐந்து கோடி ரூபாய்க்குக் கேட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மிரட்டியே கேட்டுள்ளார். அப்போது ராசகணபதி அவர்கள், இப்படியே காசுக்கு ஆசைப்பட்டு இடங்களை கட்டடங்களாக்கினால், வரும் தலைமுறைக்கு விவசாயத்தை அருங்காட்சியகத்தில்தான் காட்ட வேண்டும் எனச் சொல்லி மறுத்துவிட்டார். இவர், எம்.சி.ஏ படித்திருப்பவர். படிக்கும் காலத்தில் விவசாயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், 2005-ம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அந்த வாழ்வில் அவருக்கு ஈர்ப்பில்லை. அதேநேரம் கிராம வாழ்வும், கிராம உணவின் அருமையும் அவருக்குப் புரிந்தது. எனவே, 2011ம் ஆண்டில் அந்த வேலையை விட்டுவிட்டு, கிராமத்திற்கு வந்த ராசகணபதி அவர்களுக்கு, திருமணமும் முடிந்து, ஒரு மகனும் பிறந்தான். மகனுக்கு கடை பால் ஒத்துவரவில்லை. அதனால், மகனுக்காக நாட்டுமாடு ஒன்று வாங்கினார். அந்தப் பால் குடித்த மகன் நலமானான். அதனால், தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வோம், நாட்டுமாடுகள் வளர்ப்போம் என்று, தற்போது அவ்வேலையை மிக ஆர்வத்துடன் செய்து வருகிறார் அவர். நிலத்தில் ஒரு பகுதியில கத்திரி, மிளகாய், வெண்டை, அவரை, பீர்க்கங்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தக்காளி, முருங்கை, நாட்டு வெங்காயம் என இயற்கை முறையில் பயிர் செய்கிறார். தவிர, தோட்டத்தில் நிறைய நாட்டு மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து வருகிறார். ஆரம்பத்தில் விளைச்சல் சரியாக இல்லாவிடினும், விடாப்பிடியாக விவசாயம் பண்ணி, இப்போது அது ஓரளவு கையைக் கடிக்காத மகசூலை தர ஆரம்பித்துள்ளது. மேலும், நாட்டு மாடுகளை அதிகப்படுத்தி, இப்போது இருபது  மாடுகள் வைத்திருக்கிறார் ராசகணபதி. ஊர் மக்களுக்கு நல்ல பால் கிடைக்க வேண்டும் என்று, மாடுகள் தரும் எல்லாப் பாலையும், உள்ளூரிலேயே விற்பனை செய்கிறார். அடுத்த கட்டமாக, ஆற்றோரம் இருக்கும் நிலத்தில் இயற்கை முறையில் நெல் சாகுபடி பண்ணலாம் என எண்ணி இருக்கிறார் ராசகணபதி. எவ்வளவு பணக்கஷ்டம் வந்தாலும் சரி, எவ்வளவு கோடிகளைக் கொட்டி வாங்க நினைத்தாலும் சரி, எனது இந்த இரண்டு ஏக்கர் நிலத்தை யாருக்கும் தாரை வார்க்கமாட்டேன். (நன்றி விகடன்)

02 May 2019, 15:05