தேடுதல்

Vatican News
அழிவை எதிர்நோக்கியிருக்கும் பன்முக உயிரினங்களில் ஒன்று அழிவை எதிர்நோக்கியிருக்கும் பன்முக உயிரினங்களில் ஒன்று 

பூமியில் புதுமை – மனித இனத்தால் அழியும் பன்முக உயிரினங்கள்

1970ம் ஆண்டு முதல், மனித இனத்தின் பல்வேறு செயல்பாடுகளால், தாவர, மற்றும் விலங்கினங்கள் பெருமளவு அழிவைச் சந்தித்து வருவதாக, WWF எனப்படும், உலக வனவாழ்வு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

பூமிக்கோளத்தில், உயிர்கள் தோன்றிய காலம் முதல் நிகழ்ந்த, காலநிலை மாற்றம், எரிமலை வெடிப்பு, வேற்றுக் கோளங்கள் மற்றும், விண்மீன் கற்களின் மோதல், போன்ற காரணங்களால், டைனசோர் உட்பட, பல்வேறு உயிரினங்கள், பெருமளவு அழிவைச் சந்தித்துள்ளன. பரிணாம வளர்ச்சியாலும், பல உயிரினங்கள் மறைந்துள்ளன.

கடந்த 6 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளாக, உலகில் உள்ள தாவர, மற்றும் விலங்கினங்கள், பெருமளவு அழிவுகளிலிருந்து தப்பித்து வந்துள்ளன. ஆனால், 1970ம் ஆண்டு முதல், மனித இனத்தின் பல்வேறு செயல்பாடுகளால், தாவர, மற்றும் விலங்கினங்கள் பெருமளவு அழிவைச் சந்தித்து வருவதாக, WWF (World Wildlife Fund) எனப்படும், உலக வனவாழ்வு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.

உயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலியல் பன்னாட்டு அரசுகளின் அமைப்பு, 2019ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், உலகிலுள்ள 10 இலட்சம் உயிரினங்கள் அழிவை நோக்கிச் செல்லும் ஆபத்தில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. உயிர்களின் பன்முகத்தன்மை அழிந்து வருவதற்கு, கூறப்பட்டுள்ள காரணங்களில் ஒரு சில:

1. Habitat Loss – அரியவகை உயிரினங்களின் உறைவிடங்கள் அழிக்கப்பட்டு, அங்கு மனிதரின் குடியேற்றமும், அவர்களது தொழில் முயற்சிகளும் துவக்கப்படுதல்.

2. Over Exploitation - தேவைக்கும் அதிகமாக ஏனைய உயிரினங்களையும், அவற்றின் உறைவிடங்களையும் சுரண்டுதல்.

3. Agricultural Intensification - உணவைப் பெருக்கும் முயற்சியாக, வேளாண்துறையில், வேதியியல் பொருள்களின் அதிகமான பயன்பாடு.

4. Pollution - மனிதர்கள் பயன்படுத்தி, தூக்கியெறியும் ஞெகிழிப் பொருள்களின் தாக்கம். Ellen MacAruthur அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஞெகிழிப் பொருள்களின் பயன்பாட்டிலும், தூக்கியெறிதலிலும் தற்போதையப் போக்கினை மக்கள் தொடர்ந்தால், 2050ம் ஆண்டிற்குள், கடல்களில் வாழும் மீன்களின் எண்ணிக்கையைவிட, கடல்களில் கலக்கும் ஞெகிழிப் பொருள்களின் குப்பை கூடுதலாக இருக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. (ஆதாரம் - https://populationmatters.org/the-facts/biodiversity)

28 May 2019, 13:52