தேடுதல்

Vatican News
மரங்களையும் அன்புகூர்வோம் மரங்களையும் அன்புகூர்வோம் 

பூமியில் புதுமை : பூமிப்பந்தைக் காக்க விதைப்பந்தை கையிலெடுத்தவர்

நிலா என்ற நர்சரியை உருவாக்கி, அதில் பல்வேறு மரக்கன்றுகளை தயார் செய்து, தன் கிராமத்தில் மட்டுமல்லாது, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோயில்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து வருகிறார், திருவாரூரின் அதிசய மனிதர், கலைமணி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன்னுடைய வாழ்நாளில் மரம் வளர்ப்பதையும், பிறருக்கு மரக்கன்றை அன்பளிப்பாக கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார், திருவாரூரைச் சேர்ந்த அதிசய மனிதர், கலைமணி. குத்தாலம் அருகேயுள்ள குழையூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், பள்ளியில் என்.சி.சி. மாணவராக இருந்தபோது, மரம் நடுதல் நிகழ்ச்சியில் ஈடுபட்டு, அதிலிருந்து மரக்கன்று நடுதல் மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் வளர்த்துக்கொண்டவர். ஊரில் மக்கள் நற்பணி மன்றம் ஆரம்பித்து, நண்பர்களோடு, பள்ளியிலும், கிராமத்திலும் 6 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டார். இதனால், அவர் கிராமத்திற்கு பசுமைக் கிராமம் என்ற விருதும் கிடைத்தது. நேரு யுகேந்திரா இளைஞர்கள் அமைப்பு சார்பில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் மரக்கன்றுகளைக் கொடுத்து, மெல்ல, மெல்ல, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களிடையே ஏற்படுத்தினார். அதிலிருந்து, 20 வருடங்களாக, திருமண நிகழ்ச்சி, பிறந்தநாள் நிகழ்ச்சி, பள்ளிகள், கல்லூரி விழாக்கள் எதுவாக இருந்தாலும், பரிசுப்பொருட்களுக்குப் பதிலாக, மரக்கன்றுகளை  பரிசாகவும், அன்பளிப்பாகவும் கொடுத்து வருகிறார் கலைமணி. நிலா என்ற நர்சரியை உருவாக்கி, அதில் பல்வேறு மரக்கன்றுகளை தயார் செய்து, தன் கிராமத்தில் மட்டுமல்லாது, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோயில்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை கொடுத்து வரும் கலைமணி அவர்கள், தான் மரக்கன்று கொடுக்கும் யாரிடம் காசு வாங்குவதில்லை. தன்னுடைய  சொந்த செலவில், இதனை ஓர் அறப்பணியாகச் செய்துவருகிறார்.  

மரம் வளர்ப்பது ஒர் அறம்... அதை இன்றே, இப்போதே செய்வோம்.

நன்றி - விகடன்

05 April 2019, 14:07