தேடுதல்

Vatican News
பிளாஸ்டிக் கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : பிளாஸ்டிக் பல்துலக்கிகள் தரும் ஆபத்து

பிளாஸ்டிக் பயன்பாடு, கால் நடைகளின் அழிவிற்கும், நீர் வாழ் உயிரினங்களின் அழிவிற்கும் காரணமாகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கும், இது காரணமாகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 50 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பைகள், அதாவது, ஒவ்வொரு நிமிடத்திற்கும் 10 இலட்சம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகளை அழிப்பது மிகவும் கடினமானது. இப்பிளாஸ்டிக் பைகள் முழுமையாக அழிய, குறைந்தது, 300 ஆண்டுகளாவது ஆகும். பூமியின் நிலப்பரப்பில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளைத் தின்று, அவற்றைச் சீரணிக்கமுடியாமல், கால்நடைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. பூமியின் மேல்பரப்பில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள் மழைநீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுத்துவிடுவதால், நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகின்றது. ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் பைகளால், அவற்றில் வாழும் உயிரினங்கள் சிறிது சிறிதாக அழிந்துகொண்டே இருக்கின்றன.

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து, நம் வாழ்விலிருந்து ஓர் எடுத்துக்காட்டைச் சிந்திப்போம். நாம் பல் துலக்குவதில் கூட பழையதைத் துறந்து, புதியதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்பதெல்லாம் மறந்து, மறைந்து, அங்கும் பிளாஸ்டிக் பயன்பாடு ஆக்ரமித்து விட்டது. அழகிய நிறங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பல் துலக்கி (Tooth Brush) முக்கியமான கழிவுப் பொருளாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றது என்பது மற்றோர் அதிர்ச்சிகரமான தகவல். ஆண்டொன்றில் தனிமனிதர் சராசரியாகப் பயன்படுத்தும் ஆறு பல்துலக்கிகள் மற்றும் அவற்றைத் தாங்கிவரும் உறைகள் அகியவற்றின் எடை சுமார் 150 கிராம் இருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள 700 கோடி மக்கள் பயன்படுத்தி வீசியெறியும் பிளாஸ்டிக்கிலான பல்துலக்கிகள் மற்றும் அதற்கான உறைகளின் எடை 10.5 இலட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக இருக்கும். ஓர் ஆண்டில் வீணாகும் பிளாஸ்டிக் பல்துலக்கிகள் இவ்வளவு எடை கொண்டதாக இருந்தால், ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இதன் எண்ணிக்கையும் அதிகமாகப் போவதுடன் அழிக்க முடியாமல், இந்தப் பூமியில் தேங்கிப் போகும் அபாயமும் வந்து கொண்டிருக்கிறது.

03 April 2019, 15:37