தேடுதல்

Vatican News
தந்தையின் விவசாயத்தைத் தொடர்ந்த மகள்Jyotsna தந்தையின் விவசாயத்தைத் தொடர்ந்த மகள்Jyotsna  

பூமியில் புதுமை : தந்தையின் விவசாயத்தைத் தொடர்ந்த மகள்

கணினிப் பொறியாளராக விரும்பிய இளம்பெண் ஜியோத்னா அவர்கள், விவசாயத்திற்கென நேரம் ஒதுக்கி, அதில் கவனம் செலுத்தும் ஆர்வத்தில், இளங்கலை கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்தார்

மேரி தெரேசா – வத்திக்கான்

வாழ்வில் என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், அது எப்போதுமே ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. மகராஷ்ரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லோன்வாடி (Lonwadi) கிராமத்தைச் சேர்ந்த விஜய் தாவுந்த் (Vijay Daund) தம்பதியருக்கும், அவர்களின் மகள் ஜியோத்னாவிற்கும் (Jyotsna) இதுதான் நிகழ்ந்துள்ளது. வழக்கறிஞராக விரும்பிய, விஜய் தாவுந்த் அவர்கள், குடும்பச் சூழல் காரணமாக, திராட்சைத் தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டார். 1998ம் ஆண்டில், ஜியோத்னாவிற்கு ஆறு வயதும், அவரது தம்பிக்கு ஒரு வயதும் நடந்தபோது, விஜய் தாவுந்த் அவர்கள் ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் அவரின் மனைவி லதா குடும்பப் பொறுப்பையும், பண்ணைப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார். அப்போது தாயுடன் சேர்ந்து ஜியோத்னாவும் பண்ணையைக் கவனிக்க ஆரம்பித்தார். ஜியோத்னாவுக்கு பன்னிரண்டு வயதாகும்போதே விவசாயத்தைப் பற்றி அதிகம் அறிந்து வைத்திருந்தார். பள்ளிப்படிப்பின்போதே பண்ணையைக் கவனித்துக்கொண்டே படித்த ஜியோத்னா அவர்கள், தேர்வு நேரங்களில்கூட பண்ணையில்தான் படிப்பார். 2005ம் ஆண்டில், நடக்க முடியும் என்ற நிலை வந்தபோது, விஜய் தாவுந்த் அவர்கள், தனது மனைவிக்கும் மகளுக்கும் ஓய்வு கொடுத்து நிலத்தைப் பார்த்துக் கொண்டார். அதன் பின்னர், ஜியோத்னா கல்லூரியில் இளங்கலை பொறியியல் படிக்கத் தொடங்கினார். 2010ம் ஆண்டு திராட்சை அறுவடை செய்ய தயாராக இருந்த சமயத்தில், கடையில் உரத்தை வாங்கிக்கொண்டு இறங்குகையில், கால்தடுக்கி மாடிப்படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்துவிட்டார் விஜய். இம்முறை அவரது கால் நிரந்தரமாக முடங்கிவிட்டது. அடுத்த வினாடியே பண்ணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் ஜியோத்னா. கணினிப் பொறியாளராக விரும்பிய ஜியோத்னா, இளங்கலை கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்தார். அப்போதுதான் பண்ணைக்கு நேரம் ஒதுக்கி வேலை செய்ய முடியும் என்று அவர் நினைத்தார். அதிகாலையில் எழுந்து பண்ணைக்குச் சென்று வேலைகளை முடித்து, பின்னர் 18 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கல்லூரியில் படித்தார் அவர். கனரக விவசாய வாகனத்தை ஓட்டுவதற்கு தந்தையிடமிருந்து இவர் கற்றுக்கொண்டார். நாசிக் மென்பொருள் கணினி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்த இவர், 2017ம் ஆண்டில் அவ்வேலையைத் துறந்து முழுநேரமும் விவசாயத்தில் ஈடுபட்டார். இவரது முயற்சியால், திராட்சை பண்ணையில், ஒவ்வொரு குலையும், 25 முதல் 30 பழங்களைத் தந்தன. ஜியோத்னா அவர்கள், 2018ம் ஆண்டில், Krishithon பன்னாட்டு அமைப்பின் ‘சிறந்த பெண் விவசாயி’ என்ற விருதையும் பெற்றார். கடின உழைப்பும் கடவுளின் கருணையும், வெற்றியை அள்ளித்தரும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு (நன்றி விகடன் துரை.நாகராஜன்)

29 April 2019, 14:03