தேடுதல்

Vatican News
பிளாஸ்டிக் கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள்  (AFP or licensors)

2030க்குள் பிளாஸ்டிக்கை ஒழிக்க 170 நாடுகள் உறுதி

நைரோபியில் நடைபெற்ற, ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில், நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் அமைச்சர்கள், ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என, 4,700க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

2030ம் ஆண்டுக்குள் உலகில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறிப்பிடத்தக்க வகையில் குறைப்பதற்கு, ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாடு ஒன்றில், ஏறக்குறைய 170 நாடுகள் உறுதியளித்துள்ளன.

கென்யாவின் நைரோபியில் இவ்வெள்ளியன்று முடிவுற்ற, ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொண்ட 4,700க்கும் அதிகமான பிரதிநிதிகள், ஐந்து நாள்களாக விவாதங்களை நடத்திய பின்னர், இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுவதைக் குறைத்தல், வளர்ச்சி குறித்த புதிய விதிமுறைகளில், பூர்வீக இன மக்களை கலந்தாலோசித்தல் போன்றவை குறித்த தீர்மானங்களும் இம்மாநாட்டில் கையெழுத்திடப்பட்டன.  

மார்ச் 11 இத்திங்கள் முதல், 15, இவ்வெள்ளி முடிய நைரோபியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில், 170 நாடுகளிலிருந்து, 4,700க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

உலகின் பெருங்கடல்களில் ஒவ்வோர் ஆண்டும் எண்பது இலட்சம் டன்களுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. (UN)

மேலும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மார்ச் 15, இவ்வெள்ளியன்று ஒருநாள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, அடையாளப் போராட்டம் நடத்தினர்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க் அவர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பாக, ஒவ்வொரு வாரமும், இதற்காகப் போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (Agencies)

16 March 2019, 14:50