தேடுதல்

Vatican News
செடிகளுக்கு மருந்து தெளித்தல் செடிகளுக்கு மருந்து தெளித்தல்  (BENOIT TESSIER)

பூமியில் புதுமை : எண்டோசல்பான்' பூச்சிக்கொல்லியால் பாதிப்பு

கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காடு பகுதிகளில் ‘எண்டோசல்பான்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்து, கடந்த 1970 முதல் 2011 ஆண்டு வரை, ஆண்டுக்கு 3 முறை வான் வழியாக தெளிக்கப்பட்டதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்தனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காடு பகுதிகளில் 4,600 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஏலக்காய், மற்றும், முந்திரித் தோட்டத்தில், ‘எண்டோசல்பான்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்து கடந்த 1970 முதல் 2011 ஆண்டு வரை, ஆண்டுக்கு 3 முறை வான் வழியாக தெளிக்கப்பட்டது. அளவுக்கதிகமாக தெளிக்கப்பட்ட இந்த பூச்சிமருந்தால், அந்த மாவட்டங்களில் வாழ்ந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். இதையடுத்து, ‘எண்டோசல்பான்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு கடந்த 2011, மே 13ம் தேதி உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ‘எண்டோசல்பான்’ பாதிப்பு குறித்து, அதிகாரப்பூர்வமற்ற வகையில் எடுக்கப்பட்ட ஆய்வில், 14 வயதுக்கு கீழ் உள்ள 613 குழந்தைகள் ‘எண்டோசல்பான்’ தெளிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும், தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை தானே முன்வந்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், 2012ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில். உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையின் உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது, மனித உரிமை மீறல் என்றும், கண்டனம் தெரிவித்தது.

29 March 2019, 14:23