தேடுதல்

Vatican News
வயலில் பணிபுரியும் விவசாயிகள் வயலில் பணிபுரியும் விவசாயிகள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : விவசாய நிலங்கள் அழிந்து விடக்கூடாது........

முள் வளர்ந்து கிடக்கிறது என நிலத்தை பார்த்து பெருமூச்சு விடும் நாம், அதை சீரமைத்து சிறிய அளவிலாவது காய்கறியாவது விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காரைக்குடி அருகே பள்ளத்தூர் பெரிய கண்மாய் உதவியுடன் முப்போகம் விளைந்த 140 ஏக்கர் நிலத்தில் 10 ஆண்டுக்கும் மேலாக மண்டிக்கிடந்த  சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழித்து, 110 ஏக்கரில் விவசாயம் மேற்கொண்டுள்ளனர், பள்ளத்தூர் விவசாயிகள்.

வருமானம் ஈட்டும் நோக்கத்தோடு, சிங்கப்பூருக்கு, வேலைக்கு சென்ற எஸ்.பி. தனுஷ்கோடி என்பவர், ‘என்னதான் சம்பாதித்தாலும், நம் நிலத்தில் விவசாயம் செய்து அடையும் திருப்திக்கு அளவே இல்லை. அதனால்தான், இங்கு வந்த பிறகு, இந்த இடத்தை சீரமைத்து விவசாயம் செய்தால் என்ன என, இங்குள்ள விவசாயிகள் சேர்ந்து சிந்தித்தோம்’, என்கிறார்.

இன்ஜினியர் ஆர்.நாராயணன் என்பவரோ, ‘உடுமலை பேட்டை பகுதியில் கட்டடத்தொழில் செய்து வந்தேன். நம் தலைமுறையுடன் விவசாய நிலங்கள் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், நிலத்தை சமன் செய்து, விவசாயம் செய்து வருகிறோம். ரூ.3 இலட்சத்தில் வரத்துக் கால்வாயை சீர் செய்துள்ளோம். தற்போது ஒரு ஏக்கர் நிலத்தைச் சீரமைக்க ரூ.20 ஆயிரமும், அதில் விவசாயம் செய்ய ரூ.20 ஆயிரமும் ஆகும் என கணக்கிட்டுள்ளோம். இந்த ஆண்டு இலாபம் கிடைக்காவிட்டாலும், வரும் ஆண்டுகளில், தொடர்ந்து விவசாயம் செய்து, அதை மீட்டெடுக்க ஆர்வம் கொண்டுள்ளோம்’  என்கிறார். 

முள் வளர்ந்து கிடக்கிறது என நிலத்தை பார்த்து பெருமூச்சு விடும் நாம், அதை சீரமைத்து சிறிய அளவிலாவது காய்கறியாவது விளைவிக்க வேண்டும் என எண்ணும் பள்ளத்தூர் விவசாயிகளைப் பாராட்டுவோம்.  

நன்றி : தினமலர்

'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தில், பிறர் தேவைகளுக்காக செபிப்பதன் வழியாக, அது, ஒருமைப்பாடு, மற்றும், பிறர் உணர்வை புரிந்து செயல்படுவதன் செபமாக மாறுகிறது.

27 March 2019, 16:15