தேடுதல்

Vatican News
விவசாயப் பணியில் இந்திய பெண்கள் விவசாயப் பணியில் இந்திய பெண்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : நாடு போற்றும் நெல்லை பெண் விவசாயி!

எங்களுடைய பாட்டி, சின்ன வயதில் இருந்தே வயலுக்கு வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தபோதுகூட விவசாயத்தைப் பற்றித்தான் விசாரித்துக் கொண்டிருப்பார். அவரிடம் இருந்துதான் விவசாயம் மீதான பிடிப்பு எனக்குத் தீவிரமானது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமலராணி அவர்கள், ஓர் ஆங்கில இலக்கியப் பட்டதாரி. குடும்பத்தில், கணவனும், பிள்ளைகளும், மருத்துவர்கள். தேசிய அளவில், பலரும் விவசாயத் தொழிலை கௌரவக் குறைவாகக் கருதும் நிலையில், அதை அக்கறையுடன் மேற்கொண்டுவருவது மட்டுமல்லாமல், அத்தொழிலில் தேசிய விருதும் பெற்றுச் சாதனை படைத்தவர், திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி, அமலராணி. திருந்திய நெல் சாகுபடி முறையில், மகசூல் சாதனை படைத்ததற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர், பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து, 2015ம் ஆண்டில், விருது பெற்றுள்ளார், அமலராணி.

“எங்களுடைய பாட்டி, சின்ன வயசில் இருந்தே வயலுக்கு வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார். அந்தக் காலத்தில் கமலையில் தண்ணீர் இறைத்துத்தான் விவசாயம் செய்ய வேண்டும். ஒரு முறை கமலையில் தண்ணீர் இறைக்கும் ஒரு மாடு இறந்துவிட்டது. அப்போது, அவரும், அவருடைய தங்கையும், வைராக்கியத்துடன், கமலையில் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்வதை நேரில் பார்த்தேன். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தபோதுகூட விவசாயத்தைப் பற்றித்தான் பாட்டி விசாரித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலப் பெண்களுக்கு மண் மீது பாசமும் பிடிப்பும் அதிகம். அவரைப் போன்றவர்களிடம் இருந்துதான் இந்த மண், விவசாயம் மீது எனது ஈர்ப்பு தீவிரமானது. ஏதோ ஒரு வகையில் இயற்கையுடன் இணைந்து இருப்பதன் வழியாக,  நம்மை ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடிகிறது” என்கிறார் அமலராணி.

“விவசாயத்தை மேற்கொள்ளும் அக்கறையை எங்கள் குழந்தைகளிடமும் விதைப்போம்” என மேலும் கூறுகிறார் நம்பிக்கையுடன். பூமியின்மீது அக்கறை என்ற விதையை, எல்லா அம்மாக்களும் விதைக்க வேண்டியது அவசியம்.

மார்ச் 8, உலக மகளிர் தினத்தன்று, சாதனைப் பெண்களின் பெருமை பாடுவோம்.(நன்றி: ஹிந்து)

08 March 2019, 14:59