தேடுதல்

Vatican News
சிங்கப்பூர் நதியின் வண்ண தோற்றம் சிங்கப்பூர் நதியின் வண்ண தோற்றம் 

பூமியில் புதுமை : உலகின் மிக அழகான ஆறு

Caño Cristales ஆறு, ஏறக்குறைய ஜூனிலிருந்து, டிசம்பர் மாதத் துவக்கம் வரை, சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், வெளிர்கறுப்பு ஆகிய வண்ணங்களால் நிறைந்து பாய்ந்தோடும் அழகு, கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

உலகில் பாய்கின்ற மொத்த ஆறுகளின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்பட முடியாவிடினும், ஆறுகளின் நீளம் மற்றும் அகலத்தை வைத்து, ஏறக்குறைய 165 பெரிய நதிகள் உள்ளன எனவும், இவற்றில், நைல், அமேசான், கங்கை, மிசிசிப்பி, டான்யூப், யாங்சி (Yangtze), மிக்கான் (Mekong), வோகா (Volga), தேம்ஸ், ஜம்பெசி (Zambezi) ரைன், சென், ஒரினோகோ (Orinoco ), மிசவ்ரி ஆகிய பதினான்கு நதிகள் மிகவும் புகழ்பெற்றவை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இவை அனைத்திலும், Caño Cristales, உலகின் மிக அழகான ஆறு எனப் போற்றப்படுகின்றது. தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில் பாய்கின்ற Caño Cristales ஆறு, ‘ஐந்து வண்ண ஆறு’, ‘பளிங்கு ஆறு’, மற்றும் ‘திரவ வானவில்’ எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆண்டில், ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு ஏனைய ஆறுகளைப்போல்தான் காட்சியளிக்கின்றது. ஆனால், ஏறக்குறைய ஜூனிலிருந்து, டிசம்பர் மாத துவக்கம் வரை, சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், வெளிர்கறுப்பு ஆகிய நிறங்கள் உட்பட, வானவில் வண்ணங்களைக்கொண்டு, இது பாய்ந்தோடும் இயற்கை அழகை, இப்பூமியில் வேறெங்கும் காண முடியாது எனச் சொல்கிறார்கள். 62 மைல் நீளத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, தனது வழித்தடங்களில், பல்வேறு வட்டவடிவ அமைப்புகள், பாறைகளில் துளைகள், அருவிகள், வேகமான நீர்சுழற்சிகள் போன்றவற்றைக் கொண்டிருப்பது அழகிலும் அழகுதான். இந்த ஆற்றில் அழகாக காட்சிதரும் முக்கிய நிறம், மாக்கரேனியா கிளவிகெரா (macarenia clavigera) என்ற நீர்த் தாவரத்தின் நிறமாகும். இந்த தாவரத்திற்கு, சரியான நீர் மட்டம், பளிச்சென மின்னுவதற்குத் சரியான சூரிய ஒளி போன்றவை அவசியம். Cano Cristales ஆறு, கொலம்பியாவின் Serrania de la Macarena தேசிய பூங்காவில் பாய்ந்தோடுகிறது. இந்தப் பூங்கா, 6,200 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. அதோடு, கொலம்பியாவின், அமேசான் பருவமழைக் காடுகள், ஆன்டெஸ் மலைத் தொடர், சவன்னா (savannah) சமவெளி ஆகிய மூன்று முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகள், சந்திக்கும் இடத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. மரவடை தாவரங்கள், மாவடை விலங்கினங்கள் உட்பட, 500க்கும் அதிகமான பறவைகள், நூறு வகையான பாலூட்டிகள், இரண்டாயிரத்துக்கு அதிகமான தாவர வகைகள், 1200க்கும் அதிகமான பூச்சி வகைகள் இந்தப் பூங்காவில் உள்ளன. இரண்டாயிரமாம் ஆண்டின் மத்திய பகுதி வரை, இந்தப் பூங்கா பகுதி கெரில்லா புரட்சியாளர்கள் நடமாடும் இடமாக இருந்ததால், மிகவும் ஆபத்தான பகுதி எனக் கருதி, அந்தப் பகுதிக்கு மக்கள் செல்ல இயலாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை, இறைவன் மனிதகுலத்திற்கு அளித்த மாபொரும் கொடை. இது தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்

28 March 2019, 13:54