தேடுதல்

Vatican News
ஏமனில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் ஏமனில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள்  (AFP or licensors)

நிலக்கண்ணி வெடிகள் மனித வாழ்வுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்

இன்னும் அகற்றப்படாமலுள்ள நிலக்கண்ணி வெடிகள், ஏறத்தாழ 14 இலட்சம் மக்கள், பாதுகாப்புடனும், மாண்புடனும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புவதற்கு, தொடர்ந்து தடைகளாக இருந்து வருகின்றன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நிலக்கண்ணி வெடிகளைத் தடைசெய்யும் ஐ.நா. ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியும், முன்னாள் போர்த்தளங்களில், நிலக்கண்ணி வெடிகளால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், காயமடைவதும் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

நிலக்கண்ணி வெடிகளிலிருந்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கென, இந்த தடை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதன் இருபதாம் ஆண்டு, மார்ச் 01, இவ்வெள்ளியன்று, ஐ.நா.வில் நினைவுகூரப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய, ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், நிலக்கண்ணி வெடிகள் தடை ஒப்பந்தம், எண்ணற்ற மக்களின் வாழ்வு, உடல் உறுப்புக்களை இழத்தல் மற்றும் காயமடைதலினின்று காப்பாற்றியுள்ளது என்று கூறினார்.

எனினும், 1999ம் ஆண்டிலிருந்து நிலக்கண்ணி வெடிகளுக்கு பெருமளவில் சிறார் பலியாவது உட்பட, இவ்வெடிகள், போரின் கருவிகளாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன எனவும், கூட்டேரெஸ் அவர்கள் குறை கூறினார்.

2014ம் ஆண்டு ஏப்ரலில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போர் துவங்கியதிலிருந்து, இன்றைய நிலவரப்படி, இவ்வெடிகளால் 157 சிறார் உட்பட 931 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. (UN)

02 March 2019, 15:37