தேடுதல்

Vatican News
இந்தியாவின் ஸ்ரீநகர் தால் ஏரி இந்தியாவின் ஸ்ரீநகர் தால் ஏரி  (AFP or licensors)

பூமியில் புதுமை : விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கல்வி

வறண்ட கிணறுகளையும், ஆழ்குழாய் கிணறுகளையும், நீராதாரங்களையும், உயிர்ப்பிக்கும், ‘வாட்டர் காந்தி’ என்றழைக்கப்படும், பொறியியல் வல்லுநர், ஐயப்ப மசாகி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியாவை, 2020ம் ஆண்டுக்குள், தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்படுபவர், பங்களூருவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர், ஐயப்ப மசாகி. ஏரிகள் பல உருவாக காரணமாக இருந்தது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது என, இவருடைய சாதனைப் பட்டியல் நீள்கிறது.

வறண்ட கிணறுகளையும், ஆழ்குழாய் கிணறுகளையும், நீராதாரங்களையும் உயிர்ப்பிக்கும் எளிய தொழில்நுட்பத்துக்குச் சொந்தக்காரரான இவர், ‘வாட்டர் காந்தி’ என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.

இவருடைய அம்மா, பல கிலோ மீட்டர் தூரம், பானைகளைச் சுமந்து சென்று, தண்ணீர் சுமந்து வந்த காட்சிகள், பசுமரத்தாணிபோல், இவர் மனதில் பதிந்திருக்கின்றன. இதனால் 25 ஆண்டு காலப் பணிக்குப் பின், நீராதாரங்களைப் புனரமைக்கும் பணிக்கு, ஐயப்ப மசாகி அவர்கள், தன்னை அர்ப்பணித்திருக்கிறார், அதில் வெற்றியும் பெற்றுள்ளார். குடும்பம், வறுமை என்று பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி, இச்சாதனைகளை அவரால் நிறைவேற்ற முடிந்திருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தில், சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில், தண்ணீரின்றி வறண்ட பகுதிகளை இவர் வளப்படுத்தியிருக்கிறார். நீர்நிலைகளை உயிர்ப்பிக்கும் திட்டங்களில், ஓராண்டுக்குள் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார். மழைநீரைச் சேகரித்து, வளம்பெறும் வழிகள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கல்வி அளிக்கும் மகத்தான பணியையும் பொறியியல் வல்லுநரான ஐயப்ப மசாகி அவர்கள் செய்துள்ளார். (பசுமை தமிழகம்)

20 February 2019, 15:27