தேடுதல்

Vatican News
கெளதம் சாரங் வடிவமைத்த வீடு, அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கெளதம் சாரங் வடிவமைத்த வீடு, அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் 

பூமியில் புதுமை – “நவீன வாழ்க்கைமுறை வேண்டாம்”

இயற்கையைச் சிதைக்காமல், மனிதத்துடன் வாழ்வதே, கெளதம் சாரங் அவர்களின் வாழ்க்கைத் தத்துவம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கல்வி என்பது, பாடப் புத்தகத்தில் இல்லை; அது, தீர்வுகளைக் காண்பதில் அடங்கியிருக்கிறது என்கிறார், கெளதம் சாரங் என்ற இளையவர். பள்ளிக்கு செல்லவில்லை, பட்டமும் வாங்கவில்லை. ஆனால், கெளதம் அவர்களால், ஆறு மொழிகளை சரளமாகப் பேசமுடியும், இணையத்தளங்களை வடிவமைக்கமுடியும், இயற்கைக்கு எந்தக் கெடுதலும் விளைவிக்காத வீடுகளைக் கட்டமுடியும்.

கெளதமின் பெற்றோர், கோபாலகிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி இருவரும், அரசுப் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றியபோது, நிஜ வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லாமல், அதற்குத் தேவையான நம்பிக்கையை வழங்காமல், நுகர்வை மட்டும் கற்பித்துவரும் இக்கல்விமுறைக்கு, மாற்று தேவை என்றுணர்ந்தனர். எனவே, இருவரும், தங்கள் அரசுப்பணியை விட்டுவிட்டு, கேரள மாநிலம், அட்டப்பாடி, கூலிக்கடவு அருகே அமைந்துள்ள ஒரு காட்டுப் பகுதியில், தொண்ணூறுகளில் குடியேறினர். தங்கள் மகனை அவர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை.

"நாம் வாழும் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்பட்டால்தான் நமக்கு எதிர்காலம் என்றால், அதைக்குறித்து சொல்லித்தருவதுதானே கல்வி?" என்று கேட்கும் கௌதம் அவர்கள், தன் மூன்று குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல், அவர்களை, அவர்கள் சூழலில் வளரவிட்டு, இவரே கற்பிக்கிறார். அவர் தன் குடும்பத்தோடு தங்கியிருக்கும் வீடு, அவரே வடிவமைத்துக் கட்டியது. சூழலுக்கு எந்த ஊறும் விளைவிக்காத வகையில், மூங்கில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது, அந்த வீடு.

"பள்ளிக்கு செல்லாதீர்கள். பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பிரச்சாரம் செய்வது என் நோக்கமல்ல. அடுத்த தலைமுறைக்கும் இந்தப் புவி வேண்டும். அதற்கு, நம் வாழ்வு முறையில், சில மாற்றங்கள் வேண்டும். அவற்றைச் சொல்லித் தருவதற்கு கல்விமுறையில் மாற்றங்கள் வேண்டும் என்கிறேன். அவ்வளவுதான்" என்கிறார் கௌதம்.

கெளதம் மற்றொரு விடயத்தையும் முன் வைக்கிறார். "கிராமத்தில் குடியேறுவது, ஒரு வித ஃபேஷனாக, இப்போது மாறிவருகிறது. அதாவது, நகரத்தில் இலட்சங்கள், கோடிகள் என சம்பாதித்துவிட்டு, கிராமம் சென்று, விவசாயம் செய்கிறேன், கிராமத்தில் வாழ்கிறேன் என்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்தான் என்றாலும், இதில் ஒரு பெரும் சிக்கல் உள்ளது. இவர்கள், கிராம வாழ்க்கையைப் பின்பற்றுவதற்கு பதிலாக, இவர்கள் வாழ்ந்த நுகர்வு மயமான நகர வாழ்க்கையை கிராமத்தில் திணிக்கிறார்கள். அதுதான் பெரும் சிக்கல். இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழ நீங்கள் கிராமத்திற்குதான் செல்லவேண்டும் என்பது இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே இயன்ற வரை நுகர்வை குறைத்து வாழுங்கள்" என்கிறார் கௌதம்.

இயற்கையைச் சிதைக்காமல், மனிதத்துடன் வாழ்வதே, கெளதம் சாரங் அவர்களின் வாழ்க்கைத் தத்துவம்.

பி.பி.சி. தமிழ் இணையத்தில் மு.நியாஸ் அகமது அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து...

26 February 2019, 14:16