Cerca

Vatican News
முதல் இந்திய கல்வி அமைச்சர் மவ்லானா ஆசாத் அவர்களுடன் பிற தலைவர்கள் முதல் இந்திய கல்வி அமைச்சர் மவ்லானா ஆசாத் அவர்களுடன் பிற தலைவர்கள்  

வாரம் ஓர் அலசல் – அள்ள அள்ளக் குறையாத கல்விச்செல்வம்

மவ்லானா ஆசாத் அவர்கள், ஆரம்பக் கல்வி, தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்காகப் பாடுபட்டவர். இந்தியாவில், உயர் கல்வி மேம்பாட்டுக்காக பல்கலைக்கழக மானியக் குழுவை உருவாக்கியவர்.

மேரி தெரேசா – வத்திக்கான்

அரசர் ஒருவர் அதிகாலையில் எழுந்து மாளிகையின் மேல்தளத்தில் நின்றார். அப்போது அந்த வழியே சென்ற ஓர் இளைஞன், அரசரின் பார்வையில் பட்டான். பிறகு அரசர் திரும்புகையில், படி இடித்து நெற்றியில் இரத்தம் வந்தது. இதனால் சினம்கொண்ட அரசர்,  ‘‘பிடித்து வாருங்கள் அந்த இளைஞனை’’ என்று கட்டளையிட்டார். அந்த இளைஞனோ, ‘‘என்மேல் சுமத்திய குற்றம் என்ன?’’ என்று துணிந்து அரசரிடம் கேட்டான். அரசரோ, ‘‘இன்று காலையில் உன் முகத்தில் விழித்ததால் எனக்கு இந்தக் கதி ஏற்பட்டது. எனவே நீ உயிரோடு இருக்கக் கூடாது’’ என்றார். அந்த இளைஞனோ அதைக் கேட்டு சிரித்தான். ‘‘ஏன் சிரிக்கிறாய்?’’ என்றார் அரசர். ‘‘அரசே! மன்னிக்க வேண்டும்! என் முகத்தில் தாங்கள் விழித்ததால் உங்களுக்கு ஏற்பட்டது சின்ன காயம். ஆனால் என் கதியைப் பாருங்கள். அரசரின் தரிசனம் கிடைத்ததால் என் உயிர் போகப் போகிறதே! இதை நினைத்தேன். யாருடைய முகம் அதிர்ஷ்டமானது என எண்ணியே சிரித்தேன்’’ என்றான். அந்த இளைஞன் தன்னுடைய சாமர்த்தியப் பேச்சால் உயிர் தப்பினான். இதனைத் தந்தது அவன் பெற்றிருந்த கல்வியறிவு என்ற பாராட்டையும் பெற்றான் அந்த இளைஞன்.

நம் தமிழ்ச் சமுதாயம், கல்வியின் சிறப்பை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த சமுதாயமாக விளங்கியுள்ளது. கற்றாரையே மேன்மக்களாக மதித்துப் போற்றி மகிழ்ந்தது. இதனை நீதிவெண்பா ஒன்று இவ்வாறு விளக்குகிறது.

வளைய வேண்டுமென்பதற்காக, நெருப்பில் வாட்டினும்

பொறுத்து – வளைகிற மூங்கில்

வேந்தன் அமரும் பல்லக்கில்

அவனது முடிக்குமேலே நின்று

பெருமை கொள்ளும்! நீண்டுயர்ந்து வளரும் மூங்கிலோ

கழைக்கூத்தாடிகளின் கையகப்பட்டு, ஊர் ஊராய்த் திரிந்து

அவர்தம் காலடியில் மிதிபடும்!

இளமையிலே வருந்திக் கற்பவர்

வளையும் மூங்கிலாய்ப் பெருமையடைவர்

வருந்திக் கல்லாதவர், மிதிபடும் மூங்கிலாய்ச் சிறுமையடைவர் (நீதிவெண்பா 7)

முதல் உலக கல்வி நாள் சனவரி 24

கல்வியின் முக்கியத்துவத்தை, எக்காலத்தையும்விட இக்காலத்தில், படித்தவர், படிக்காதவர், பணக்காரர், பாமரர் என்ற வேறுபாடின்றி, தமிழர் மட்டுமன்றி, எல்லாருமே, அதிகமதிகமாக உணரத் தொடங்கியுள்ளனர். உலகின் முன்னேற்றத்தில் கல்வியின் பங்கை வலியுறுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் பொது அவை, 2018ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியன்று, உலக கல்வி நாளை உருவாக்கியது. இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும், சனவரி 24ம் நாளன்று கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றியது. 2018ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை, பெல்ஜியம் நாட்டின் Brussels நகரில் நடைபெற்ற உலகளாவிய கல்வி மாநாட்டில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி, சனவரி 24, வருகிற வியாழக்கிழமையன்று, முதல் உலக கல்வி நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. கி.மு.551ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, பிறந்த மாபெரும் சீன கல்வியாளர் Confucius அவர்கள் நினைவாக, 2019ம் ஆண்டு செப்டம்பரில் சீனாவில் முதல் கல்வி மாநாடு ஒன்றும் நடைபெறவிருக்கின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இந்த முதல் உலக கல்வி நாளை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டுப் பேசினார். கல்வியின் வழியாக, உலகில் அமைதியை வளர்க்க முடியும் என்ற யுனெஸ்கோ அமைப்பின் முயற்சிகளை ஊக்குவிக்கின்றேன். கல்வி பெறுவதற்குரிய வாய்ப்பு, எல்லாருக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன், கல்வி என்ற நற்பணியை ஆற்றும் அனைத்து கல்வியாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

இந்த உலக நாள் பற்றி ஐ.நா நிறுவனம் சில எதிர்பார்ப்புக்களை வெளியிட்டுள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், எழுத்தறிவின்மையை அகற்றவும் உலக அளவில் அரசியல் மட்டத்தில் ஆர்வம் காட்டப்பட வேண்டும், உலகின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர் சமுதாயத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் இந்த உலக நாள் உதவ வேண்டும். ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் நீடித்த நிலைத்த வளர்ச்சித் திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது. பள்ளியில் படிப்பின் தரத்தை மட்டுமல்லாமல், மாணவர்களின் திறமைகளும் வளர்க்கப்பட வேண்டும். வறுமை மற்றும், எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கும், வேலைவாய்ப்பு, திறமைகளை வளர்த்தல், நலவாழ்வு, சமூக-பொருளாதாரத்தை முன்னேற்றுதல் வழியாக, வாழ்க்கை வசதிகளை வழங்குவதற்கும் கல்வி, மிக முக்கிய பங்கை கொண்டிருக்கின்றது. மேலும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் Maulana Abul Kalam Azad அவர்கள் பிறந்த நவம்பர் 11ம் தேதி, இந்தியாவில் தேசிய கல்வி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா. மற்றும் உலகளாவிய சமுதாயத்துடன், இந்தியாவும் இணைந்து உலக கல்வி நாளைக் கடைப்பிடித்தால், இந்தியா, கல்விக்கு புதிய பாதைகளைத் திறக்கும், அது நாட்டின் நிதி மற்றும் சமுதாய வளர்ச்சிக்கும் உதவும் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

மவ்லானா அப்துல்கலாம் ஆசாத்

ஐ.நா. குறிப்பிட்டுள்ள, Maulana Sayyid Abul Kalam Azad அவர்கள், 1988ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தார். இவர், தனது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தபோது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இவர், இந்தியாவின் முதல்  கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். சாகித்திய அகாடமி, லலித் கலா அகாடமி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை உருவாக்கிய பெருமை இவரையே சேரும். ஆங்கிலேய ஆட்சியில் இந்தியக் கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத் அவர்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய, மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப் பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவருடைய கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

ஆசாத் அவர்கள், பெண் கல்வி, தொழிற்பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்தார். பல்கலைக்கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று ஆசாத் அவர்கள் கூறினார். இந்தியாவின் கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பாரசீகம், அரபு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டுத் தேவைகளை முன்னிட்டு, ஆங்கில மொழியைத் தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி, தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி,  அதற்காகப் பாடுபட்டார். உயர் கல்வி மேம்பாட்டுக்காக பல்கலைக்கழக மானியக் குழுவை உருவாக்கினார். தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். கராக்பூரில் இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம்  (ஐ.ஐ.டி) இவரது பதவிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. டெல்லியில் 1955-ல் திட்டமிடுதல் மற்றும் கட்டட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

‘‘மதவாதத்தை முழுவதுமாகக் குழி தோண்டிப் புதையுங்கள்’’ என்பதுதான் ஆசாத், மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாக இருந்தது. "மாணவர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் போராட்டங்களில் ஈடுபடுவது, அவர்களின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல. இன்றைய மாணவர்களே நாளைய அரசியல் தலைவர்கள். அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால், நாட்டிற்குத் தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும்" என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் அவர். இந்தியாவின் கல்வி மேம்பாட்டிற்கு முக்கியக் காரணமாக விளங்கியதுடன், உயர்கல்வி தரத்தை மேம்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றிய அபுல் கலாம் ஆசாத் அவர்கள்,  தனது 70-வது வயதில் 1958-ம் ஆண்டு காலமானார். 1992ம் ஆண்டு,  இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது. தனது வாழ்வின் இறுதிநாள் வரை, இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார். கல்விதான் உண்மையான செல்வம். அதனை நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் பெறவேண்டும் என்று உழைத்த பெருமைக்குரியவர் ஆசாத். ‘கல்விதான் சமூகத்தை மாற்றும் ஆயுதம்’ என்ற அவரது தொலைநோக்குப் பார்வை பரந்துவிரிந்தது. எனவே, 2008ம் ஆண்டு முதல்,  அபுல்கலாம் அவர்கள் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, இந்திய மத்திய அரசு, தேசியக் கல்வி நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. 

கல்வி, மனித உரிமைகளில் ஒன்றாகும். எல்லாருக்கும் சமமாக தரமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், இன்றும், உலகெங்கும் 26 கோடியே 20 இலட்சம் சிறாரும், இளையோரும் பள்ளிக்குச் செல்வதில்லை. 61 கோடியே 70 இலட்சம் வளர்இளம் பருவத்தினரும், சிறாரும் எழுதவும், அடிப்படை கணித அறிவும் இல்லாதவர்கள். ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில், 40 விழுக்காட்டுக்கும் குறைவான சிறுமிகளே, தொடக்க பள்ளியை முடித்தவர்கள். ஏறக்குறைய 40 இலட்சம் புலம்பெயர்ந்த சிறார் மற்றும் இளையோருக்கு, கல்வி பெறுவதற்குரிய உரிமை மீறப்படுகின்றது.

கல்வி காலத்தால் அழியாத செல்வம். கல்வி, கற்றவரை மட்டுமல்ல, அவரைச் சார்ந்தவர்களையும், ஏன் நாட்டையுமே உயர்த்தும். ‘‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போன்று, கல்விச் செல்வம் அள்ள அள்ளக் குறையாதது. எனவே கல்வி என்ற உண்மையான செல்வத்தை அனைவரும் பெறுவோம், அதனைப் பெற வழியமைப்போம், கல்வி கற்க உதவுவோம். 

வாரம் ஓர் அலசல் – அள்ள அள்ளக் குறையாத கல்விச்செல்வம்
21 January 2019, 15:16