தேடுதல்

Vatican News
இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளை மீட்க இலங்கையில் போராட்டம் இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளை மீட்க இலங்கையில் போராட்டம் 

புலம்பெயர்ந்தோரின் நிலங்கள் திருப்பியளிக்கப்பட வலியுறுத்தல்

இலங்கையின் ஏறத்தாழ முப்பது வருட உள்நாட்டுப் போரில், இராணுவம் ஆக்ரமித்திருந்த ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பகுதிகள் திருப்பியளிக்கப்பட விண்ணப்பங்கள்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட நிலப்பகுதிகள் அனைத்தும் திருப்பியளிக்கப்படும் என்று, அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீரிசேனா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு, மனித உரிமை குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட நிலப்பகுதிகள் முழுவதையும், கடந்த டிசம்பர் 31ம் தேதிக்குள் மீட்டுத் தருவதாக, அரசுத்தலைவர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என,  புலம்பெயர்ந்த மக்களும், சமூகநல அமைப்புகளும், மனித உரிமை குழுக்களும் குறை கூறியுள்ளன.

1983ம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டு வரை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பகுதிகளை இராணுவம் ஆக்ரமித்திருந்தது.

உள்நாட்டுப்போர் நிறைவுற்று ஒன்பது ஆண்டுகள் ஆகியும், அரசுத்தலைவரின் வாக்குறுதி நிறைவேறப்படவில்லை என, அக்குழுக்கள் கூறி, இவ்வாரத்தில் கொழும்புவில் பேரணியை நடத்தியுள்ளன.

இலங்கையின் உள்நாட்டுப் போரில், நாட்டிற்குள்ளேயே நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்தனர். அவர்களில் பலர், இன்னும், அவர்களின் உறவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இராணுவம் ஆக்ரமித்திருந்த நிலப்பகுதிகளில் 80 விழுக்காட்டை, அதன் உரிமையாளர்களிடம் அளித்துவிட்டதாகவும், வட பகுதியில், மேலும் 1,099 ஏக்கர்களை, விரைவில் வழங்கவுள்ளதாகவும், இராணுவப் பேச்சாளர் Sumith Atapattu அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். (UCAN)

04 January 2019, 15:01