தேடுதல்

Vatican News
பூமிக்கோளத்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகள் பூமிக்கோளத்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகள்  (AFP or licensors)

பூமியில் புதுமை: ஓர் அறிமுகம்

இந்த உலகம் என்ற உடலின் நுரையீரலாக விளங்கும் அமேசான் காடுகளை மையப்படுத்தி, ஆயர்களின் சிறப்பு மாமன்றம் இவ்வாண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

நமது பூமிக்கு இறைவன் வழங்கியுள்ள அரிய கருவூலங்களில் ஒன்றான அமேசான் காடுகளை மையப்படுத்தி, நாம் துவங்கியுள்ள புத்தாண்டின் அக்டோபர் மாதத்தில், வத்திக்கானில், ஆயர்களின் சிறப்பு மாமன்றம் ஒன்று நடைபெறவுள்ளது. நாம் உயிர்வாழ உதவும் சுவாசத்திற்கு அடிப்படையாக இருப்பது, நம் நுரையீரல். அதேபோல், இந்த உலகம் என்ற உடலின் நுரையீரலாக விளங்கும் அமேசான் காடுகளை மையப்படுத்தி, இந்த மாமன்றம் நடைபெறவுள்ளது.  

"அமேசான்: திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழல் இயலுக்கும் புதிய பாதைகள்" (The Amazon: New Paths for the Church and for an Integral Ecology”) என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இந்த மாமன்றத்தை மனதில் கொண்டு, நம் வானொலி நிகழ்ச்சியில் பூமியில் புதுமை என்ற புதியதொரு முயற்சியை இன்று துவக்குகிறோம். சென்ற ஆண்டு, இளையோரை மையப்படுத்தி உலக ஆயர்களின் மாமன்றம் நடைபெற்றதால், இளையோரை சிறப்பிக்கும் வகையில், இமயமாகும் இளமை என்ற முதல் நிமிடத் தொடரை மேற்கொண்டோம். இவ்வாண்டு, இயற்கையை மையப்படுத்தி, நாம் மேற்கொள்ளும் இப்புதிய முயற்சி வழியே, இயற்கை அன்னையிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.

விலங்கிடம் வினவுக; உமக்கு அது கற்றுக்கொடுக்கும்; வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும். அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக; அவை உமக்குக் கற்பிக்கும். ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்... ஆண்டவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும் மனித இனத்தின் மூச்சும் உள்ளன. - யோபு 12, 7-10

விவிலியத்தில், யோபு நூல் கூறும் இந்த அறிவுரையைக் கேட்காமல், இறைவன் படைத்த இயற்கையைப் பாதுகாக்காமல், நம் சுயநலன்களுக்காக இயற்கை வளங்களை அழித்துவருகிறோம். இந்தப் போக்கினால் உருவாகக்கூடிய ஆபத்துக்களை இயற்கை அன்னை அவ்வப்போது நமக்கு நினைவுறுத்தி வருகிறார். இருப்பினும், நாம் இயற்கையைப் பேணும் வழிகளை கற்றுக்கொள்ளாமல் வாழ்கிறோம். இயற்கை நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள, புதிய ஆண்டில் இந்தப் புது முயற்சியை துவக்குகிறோம்.

நம் பொதுவான இல்லமான பூமியைக் காப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி, 2015ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, இப்பகுதியில், அவ்வப்போது, பகிர்ந்துகொள்ள விழைகிறோம். இத்திருமடலின் துவக்கத்தில் திருத்தந்தை கூறியுள்ள முதலிரு எண்ணங்கள் இதோ:

நமது இல்லமான இந்தப் பூமி, நமது வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் சகோதரியைப்போலவும், நம்மை அரவணைக்கும் அன்னையைப் போலவும் உள்ளதென்று அசிசி நகர் புனித பிரான்சிஸ், 'இறைவா உமக்கே புகழ்' என்ற அழகிய பாடலில் கூறியுள்ளார்.

இந்த சகோதரி, இப்போது நம்மை நோக்கி அழுகிறார். அவருக்கு இறைவன் வழங்கிய நன்மைகளை, பொறுப்பற்ற முறையில் நாம் தவறாகப் பயன்படுத்தியதால், அவர் மீது நாம் சுமத்தியுள்ள தீமையை எண்ணி, அவர் அழுகிறார். பாவத்தின் காரணமாக, நம் உள்ளங்களில் உறைந்திருக்கும் தீமை, நமது மண்ணில், நீரில், காற்றில், மற்றும், அனைத்து உயிர்களில் வெளிப்படுகிறது. மண்ணிலிருந்து வந்தவர்கள் என்பதை நாம் மறந்துவிட்டோம். (இறைவா உமக்கே புகழ் - எண் 1,2)

01 January 2019, 15:33