தேடுதல்

மாற்றுத்திறனாளி மைக்கிள் பெல்ப்ஸ் மாற்றுத்திறனாளி மைக்கிள் பெல்ப்ஸ்  

இமயமாகும் இளமை : மாற்றுச் சிந்தனையை உலகுக்கு காட்டியவர்

மைக்கிள் பெல்ப்ஸ் அவர்களிடம், உடல் அளவில் குறைகள் இருப்பினும், அவரிடம் சிறப்பாக விளங்கிய சுய ஒழுக்கமே அவரது வெற்றிக்குக் காரணம்

மேரி தெரேசா - வத்திக்கான்

நீச்சல் போட்டியில் சென்றவிடமெல்லாம் தங்கங்களை அள்ளிக் குவித்திருப்பவர், மாற்றுத்திறனாளி மைக்கிள் பெல்ப்ஸ் (Michael Phelps) அவர்கள். ஒலிம்பிக் போட்டிகளில் 23 தங்கங்கள் உட்பட 28 பதக்கங்களை பெற்ற சாதனையாளர் இவர். 2008ம் ஆண்டு பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், எட்டு தங்கப் பதக்கங்களை வென்று, அதற்கு முந்தைய சாதனயை முறியடித்திருப்பவர். 2016ம் ஆண்டில் ரியோ தெ ஜெனெய்ரோ ஒலிம்பிக் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றதுடன், ஒலிம்பிக்கில் பங்கேற்பதை, நிறுத்திக்கொள்வதாக இவர் அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 31. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்டிமோரில் பிறந்த மைக்கிள் பெல்ப்ஸ் அவர்கள், ஏழு வயதாக இருந்தபோது, அளவுக்கு மீறிய இயக்கத்தினால் வரும் கவனக் குறைபாட்டு நோயினால் (ADHD Attention Deficit Hyperactivity Disorder) தாக்கப்பட்டார். ஒரு நிமிடம்கூட உட்காரவும், ஒருமுகத்தன்மையோடு செயல்படவும் கஷ்டப்பட்டவர். மிகவும் கவனக்குறைவால் சிரமப்படுகிறான் என, பள்ளியில் இவரது ஆசிரியர்கள் குறை சொல்லியிருக்கிறார்கள். இவர்தான் இவரது தாய்க்கு மூன்றாவது மற்றும் கடைசி மகன். ஆனால், இவருக்கு ஒன்பது வயது நடந்தபோது இவரது தந்தை இவர்களைவிட்டுப் பிரிந்து விட்டார். தனது தந்தையின் பிரிவு தன்னை மிகவும் பாதித்தது எனவும், தான், பலமுறை கடும் மனஇறுக்கத்திற்கு உள்ளானதாகவும் இவர் கூறியுள்ளார். இவரது தாய், தனது மூன்று பிள்ளைகளையும், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும், விளையாட்டில் திறமையுள்ளவர்களாகவும் வளர்த்தார். ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய மைக்கிள் பெல்ப்ஸ் அவர்கள், தனது பதினோராவது வயதில் நீச்சலில் அதிக ஈடுபாடு உருவாகிறதை உணர்ந்தார். அதற்குப் பின்னர் தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் கவனம் செலுத்தினார். இரண்டாயிரமாம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில், தனது பதினைந்தாவது வயதில் முதலில் அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றார் இவர். மைக்கிள் பெல்ப்ஸ் அவர்கள், இளம்வயதில் மோசமான உடல்நிலை, குடும்பம் சார்ந்த வேதனை என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றதற்கு, அவரிடம் விளங்கிய சுய ஒழுக்கம், தீராத விளையாட்டு ஆர்வம், உறுதியான குறிக்கோள், அயரா உழைப்பு போன்ற பண்புகளே காரணம் என, பலரும் பாராட்டுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2018, 14:34