தேடுதல்

Vatican News
அமுதா ஐ.ஏ.எஸ். அவர்கள் அமுதா ஐ.ஏ.எஸ். அவர்கள் 

இமயமாகும் இளமை : சரியானதை, துணிச்சலாகச் செய்யத் தூண்டுபவர்

பொருளாதாரம், வணிகம் போன்றவை பற்றி, பெண் அதிகாரிகள் சிந்திக்கும்போது, மனிதாபிமானம் பற்றியும் கூடுதலாகச் சிந்திப்பார்கள் - அமுதா ஐ.ஏ.எஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

இந்திய ஆட்சிப் பணியாளராக (IAS) வேண்டுமென்று 13 வயதில் கனவுகண்டு, அந்தக் கனவை 23 வயதில் நனவாக்கியவர், அமுதா ஐ.ஏ.எஸ். அவர்கள். கடந்த 26 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிவரும் இவர், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். பார்ப்பதற்கு சாதாரண பெண்ணைப்போல் காட்சியளிக்கும் அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள், தனது தனிப்பட்ட திறமையால் சட்ட மீறல்கள்களைத் தடுத்து, சமூக நலனில் அக்கறையுள்ள அதிகாரியாக வலம்வருகிறார். சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பின்னர், ஆக்ரமிப்புகளை அகற்றியது, மணல்கொள்ளையைத் தடுத்தது போன்றவற்றில், எந்த ஆண் அதிகாரியும் செய்யத் துணிந்திடாதக் காரியங்களைச் செய்து, அனைத்துத் தரப்பினரின் பாராட்டை பெற்றவர் என, அமுதா ஐ.ஏ.எஸ். அவர்களை, ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. செங்கல்பட்டில் மணல் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது, மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று, அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களை இடித்துக் கீழே தள்ளிவிட்டுச் சென்றது. ஆனாலும், அச்சமடைந்து பின்வாங்காமல் தொடர்ந்து அந்தப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறாமல் தடுத்தார் இவர். இடம் மாறுதல்கள், பணி மாறுதல்கள் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு அளிக்கும் பணியை சிறப்பாகச் செய்து முடிப்பவர். நிர்வாகத்திறன் மட்டுமல்ல, கடந்த சட்டசபை தேர்தலில் உதவி தேர்தல் அதிகாரியாக, சிறப்பாகப் பணியாற்றியவர். மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள் உட்பட, முக்கிய தலைவர்களின் இறுதிச்சடங்கை ஒருங்கிணைத்தவர் அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள். பெண்கல்வியில் பின்தங்கியிருந்த தருமபுரி மாவட்டத்தில், சுயஉதவிக் குழுக்களை அமைத்து பெண்களுக்கு பயிற்சி அளித்து, வங்கிக் கடன் பெற்று அவர்களை சுய வருமானம் ஈட்டுபவர்களாக உருவாக்கியதால், அம்மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் கல்விநிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. பள்ளி செல்லும் பெண் குழந்தைகளிடம் குழந்தைத் திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு சக மாணவிகள் பாதிக்கப்பட்டால் புகார் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியதன் பயனாக பல குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. எப்போதும் சரியானதைச் செய்யணும், அதைத் துணிச்சலாகச் செய்யணும்’’. 'சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்' என்று சொல்பவர் அமுதா ஐ.ஏ.எஸ். 

ஆண்களைப் போன்றே பெண்களும் முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள், எனவே ஒரு நல்ல நிர்வாகத்திற்கு பெண்களின் பங்களிப்பும் தேவை என்பது, இவரது விருப்பம்.

12 December 2018, 15:05