Cerca

Vatican News
சுற்றுச்சூழல் பராமரிப்பில் இந்தியச் சிறார் சுற்றுச்சூழல் பராமரிப்பில் இந்தியச் சிறார்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – சிறார் வளர்ப்பில் அக்கறை

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்பட வேண்டும். குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகள் வெளிப்படையாகப் பாராட்டப்பட வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான்

சேட்டை பண்றது தப்பா தப்பில்லையா, பேச்சை மாத்தாம பதில் சொல்லு, புரிஞ்சதா, என ஒரு தாய், தனது நான்கு வயது குழந்தையிடம் கேட்க, தப்புதான், அதுக்கு என்ன சொல்லணும் என அழுதபடி அக்குழந்தை பதில் சொன்ன 56 வினாடிகள் காணொளி கடந்த வாரத்தில் வாட்சப் கலக்கலாக வந்து அசத்தியது. திட்டாம, அடிக்காம வாயில சொல்லணும் என குழந்தை சொல்ல, தாயும், அதற்கு நீ சேட்டை பண்ணாம இருக்கணும் என சொல்ல, சேட்டை பண்ணினாலும், திட்டாம அடிக்காம, குணமா வாயில சொல்லணும் என, குழந்தை கண்ணைக் கசக்கிக்கொண்டே கூறியது. இப்ப ஏன் அழற ஸ்மித்திகா, அப்ப சேட்டை பண்ணினா அடிக்காம என்ன செய்யணும், நீ சொல்லு என தாய் கேட்க, சேட்டை பண்ணினாலும், திட்டாம அடிக்காம, குணமா வாயில சொல்லணும் என குழந்தை மீண்டும் சொல்லியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த நான்கு வயது சுட்டிக் குழந்தை ஸ்மித்திகா, எந்தவித தயக்கமுமின்றி மழலையில் கூறியது, இன்றைய குழந்தைகளின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கின்றது. ஸ்மித்திகாவின் தந்தை பிரகாஷ் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர். தாய் பிரவீனா அவர்கள், பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளர் மகள் ஸ்மித்திகா குறித்து தாய் பிரவீனா அவர்கள் கூறுகையில், “வீட்டில் ஸ்மித்திகா ஒவ்வொரு விஷயமும் பேசும்போதும் அவளைத் திட்டாமல் ஊக்கப்படுத்தினோம். கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்பாள். எங்களுக்கு விடை தெரியாமல் இருந்தாலும், அவள் கேள்வி கேட்பதை நாங்கள் நிறுத்தச் சொல்லாததால் வகுப்பில் தனித்து மிளிர்கிறாள். அதேபோல் வேலைமுடிந்து வந்ததும் தொலைக்காட்சிப் பெட்டிமுன் அமராமல், அவளிடம் பேசுவோம். அவள் வகுப்பில் நடந்ததையே சிறுகதை போல் அன்றாடம் சொல்லுவாள். அந்தளவுக்கு இரசித்துச் சொல்வதை அவள் வாயில் கேட்கும்போதே அத்தனை இரசனையாக இருக்கும்” என்றார்.

சிறாரின் நிலைமை

குழந்தைகளை மடியில் அல்லது தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு, அதேநேரம் வாட்சப்பைப் பார்த்துக்கொண்டு வரும் பெற்றோர் பலரை பேருந்துகளில் காண முடிகின்றது. குழந்தைகள் ஏதாவது கேள்விகள் கேட்டால்கூட அதற்குப் பதில் சொல்லாமல், கைபேசியிலும், வாட்சப்பிலும், முகநூலிலும் பெற்றோர் ஆழ்ந்துவிடுகின்றனர். அந்நேரங்களில் குழந்தைகள் பெற்றோரை ஏக்கத்தோடு பார்ப்பதைக் காணும்போது பரிதாபமாக இருக்கின்றது. ஒரு அறுபது ஐண்டுகளுக்கு முன்பு, கிராமங்களில் சிறார், ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்துகூட பள்ளிக்குச் சென்று வந்தனர். அப்படி படித்த மாணவர்கள் பலர், படிப்பிலும் சிறந்து விளங்கினர். கிராமங்களில் சிறுமிகள் தனியாக இரண்டு கிலோ மீட்டர் தூரம்வரைகூட வயல்களுக்குச் சென்று வந்தனர். அக்காலத்தில் எந்தவித அச்சமும் இருந்ததில்லை. ஆனால் இக்காலத்தில் பெற்றோர், குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விடவே பயப்படுகின்றனர் அல்லது பிள்ளைகளும் வீட்டைவிட்டு வெளியேறாமல், வீடியோ விளையாட்டுகளில் மூழ்கி விடுகின்றனர். பல சிறார் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், கட்டணம் செலுத்தி வீட்டுப்பாடம் செய்வதற்கு வேறு இடங்களுக்குச் சென்று விடுகின்றனர். இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஒதுக்குப்புறமான பகுதிகள் என்று பல்வேறு இடங்களிலும் செயல்படும் ஒருங்கிணைந்த குற்றக் கும்பல்கள், சாக்லேட்டுகளையும், ஐஸ்க்ரீம்களையும் காட்டிக் குழந்தைகளைக் கடத்திச் செல்வதாக குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பினர் கூறுகின்றனர். பெற்றோர்களே குழந்தைகளை விற்கும் கொடுமையும் நிகழ்கிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2016ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில், அன்றாடம் 174 குழந்தைகள் வீதம், 63,407 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 50 விழுக்காட்டு குழந்தைகள் திரும்பக் கிடைக்கவேயில்லை. பத்து முதல் 12 வயதுவரையுள்ள சிறாரைப் பொறுத்தவரை, “ஒவ்வொரு ஐந்து நிமிடமும், நாட்டின் ரயில்வே நடைமேடைகளில் ஒரு சிறார் யார் துணையுமின்றி வந்துசேர்கிறது” எனச் சொல்லப்படுகின்றது இச்சிறாரில் நிறையப் பேர், பெற்றோரின் அடி, உதைக்குப் பயந்தோ, பள்ளிகளில் தண்டனைக்குப் பயந்தோ, சினிமா நடிகராகும் கனவுடனோ இவ்வாறு வந்திறங்குகிறார்கள் எனவும் சொல்லப்படுகின்றது. அதேநேரம், சிறாரின் வாழ்வைப் பாதுகாக்கும் நல்ல உள்ளங்களும் நிறைய உள்ளன.

நோயுற்ற மாணவரைக் காப்பாற்றிய பள்ளி

கரூர் மாவட்டம், அ.வெங்கிடாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகன் செபஸ்டியான் என்ற மாணவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவனது பெற்றோர் இந்த கிராமத்தில் கூலித்தொழிலாளர்கள். சிறுவயது முதலே சுகன் செபஸ்டியானுக்கு நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்சனை. பணப் பிரச்சனையால், மகனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யாமல் பத்து வயது வரை கடத்தி வந்திருக்கிறார்கள் பெற்றோர். இதனால்,செபஸ்டியான் நிலைமை மோசமானது. அடிக்கடி மயங்கி விழுந்திருக்கிறான். இதற்கிடையில்,செபஸ்டியானின் தந்தை பிரான்ஸிஸூக்கு சர்க்கரை வியாதி முற்றி, அவரது வலது காலை எடுக்க வேண்டிய நிலைமை. அதன்பிறகு நடந்தவற்றை அந்தப் பள்ளி தலைமையாசிரியர் ஷாகுல் ஹமீது அவர்கள் விளக்குகிறார்.

அவங்க குடும்ப நிலைமையை பார்த்து மொத்த பள்ளிக்கூடத்துக்கும் கண் கலங்கிட்டு. 'செபஸ்டியானை எப்படியாச்சும் காப்பாத்தனும்'ன்னு பள்ளி மாணவர்களே சபதம் எடுத்தாங்க. ஓர் ஆசிரியர் ஒவ்வொரு மாதமும் அவங்க குடும்ப உணவுக்கு உதவுனாங்க. நாங்க ஆசிரியர்களெல்லாம் கையில் கிடைச்சத போட்டோம். மாணவர்கள் அனைவரும் வீட்டுல கொடுக்கும் அஞ்சையும், பத்தையும் இன்னும் சிலர் உண்டியல் காசை எல்லாம் கொண்டு வந்து கொட்டினாங்க. அதை வச்சு செபஸ்டியானுக்கு மருத்துவ சிகிச்சையைத் தொடங்கினோம். மருத்துவர்கள், 'ஆபரேஷன் பண்ண வேண்டிய கட்டத்தை பையன் தாண்டிட்டான். மோசமான நிலையில் இருக்கான். ஆபரேஷனில் 10 சதவிகிதமே நல்லது நடக்க சான்ஸ் இருக்கு'ன்னு அதிர்ச்சி கொடுத்தாங்க. சென்னை சூர்யா மருத்துவமனையில்தான் அறுவைச் சிகிச்சை நடந்தது. பல இலட்சம் செலவாகுற ஆபரேஷன் அது. செபஸ்டியானின் குடும்ப நிலைமையைப் பார்த்து, மருத்துவமனை நிர்வாகம் பணத்தைத் தாண்டி மனிதநேயத்தோடு ஆபரேஷனை செய்தார்கள். அங்கே உள்ள பல டாக்டர்கள் செபஸ்டியான் குடும்பத்திற்கு சாப்பாடு வாங்கி தர்றது, பேருந்துக்கு காசு தர்றதுன்னு உதவுனாங்க. ஆபரேஷன் முடிஞ்சாலும் பேச்சு மூச்சில்லாமல் 15 நாள்கள் ஐ.சி.யூவிலேயே இருந்தான். ஒட்டுமொத்த பள்ளியும் செபஸ்டியான் குணமாக வேண்டி தினமும் பிரார்த்தனை செய்தோம். மருத்துவமனை மருத்துவர்களும் வேண்டிக்கிட்டாங்க. எல்லாருடைய வேண்டுதல் பலனாக கண் முழித்தான் செபஸ்டியான். அதைக் கேட்டதும் ஒட்டுமொத்த பள்ளியும் அழுதது. இப்போ மத்த மாணவர்கள்போல் நலமாகி வருகிறான். இவன் கடவுள் குழந்தை சார். இல்லைன்னா சாவை அதன் வாசலுக்கே போய் சந்திச்சுட்டு உயிரோடு திரும்பி வந்திருப்பானா?!" என்றார் நெக்குருகிபோய் தலைமையாசிரியர்.

தன்னம்பிக்கையை ஊட்டிய ஆசிரியர்

ஆசிரியர் ஒருவர், ஒருநாள் தன் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் வெற்றுத்தாள்களைக் கொடுத்து, வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயர்களையும், ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் எழுதச் சொன்னார். மாணவர்கள் எழுதி முடித்தவுடன், ஆசிரியர் சொன்னார் - “ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும், உங்களுக்கு பிடித்த நல்ல விடயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள் என்றார். மாணவர்கள் ஒவ்வொருவரும் யோசித்து, தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர். வாரக்கடைசியில்,  ஆசிரியர், ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள் அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு, மாணவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார். மாணவர்கள் அந்தத் தாளைப் பெற்று, அவரவர் இடத்திற்குச் சென்று வாசித்தார்கள். “நான் இவ்வளவு சிறப்பானவனா? என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா?”என்று அந்த வகுப்பே ஆனம்தக் கடலில் மூழ்கியது. அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குணங்களை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தார்கள். தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும், சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரித்தது. பல ஆண்டுகள் கழித்து, அந்த வகுப்பில் படித்த சரவணனன் என்ற மாணவன் இராணுவத்தில் சேர்ந்தான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, மரணம் அடைந்தான். அவனது உடல் இராணுவ மரியாதையுடன் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கில், ஏனைய சக மாணவர்களுடன் கலந்து கொண்ட அந்த ஆசிரியர், மிடுக்கான இராணுவ உடையில், நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த சரவணனனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்கினார். ஒரு வீரர் ஆசிரியரிடம், நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு ஆசிரியரா எனக் கேட்டார், பின் சொன்னார் - “டீச்சர் எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான் என்று. அங்கு நின்ற சரவணனின் தாயும் தந்தையும் அந்த சோகத்திலும், ஆசிரியரிடம், பலமுறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாளைக் காண்பித்தனர். இது சரவணனன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது பாக்கெட்டிலிருந்து இறுதியாகக் கண்டெடுக்கப்பட்டது. அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையை ஊட்டியது இதுதான். ரொம்ப நன்றி டீச்சர். உங்கள் கடிதத்தை அவன் உயிரையும்விட மேலாக விரும்பினான். ஆமாம், பல வருடங்களுக்கு முன்னர் அந்த ஆசிரியர் சரவணனனைப் பற்றிய நல்ல குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே தாள்தான் அது! ஆம், எம் இனிய நண்பர்களே, இந்த வாழ்வில், சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவோம். குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை வெளிப்படையாகப் பாராட்டி ஊக்குவிப்போம். நல்ல குணங்கள் மென்மேலும் மேம்பட உதவுவோம்.

வாரம் ஓர் அலசல் – சிறார் வளர்ப்பில் அக்கறை 170918
17 September 2018, 15:35