தேடுதல்

Vatican News
நம்பிக்கை ஒளி நம்பிக்கை ஒளி  (AFP or licensors)

இமயமாகும் இளமை : இந்தியாவின் முதல் பெண் நீதிபதி

இந்தியாவில் ஆண்கள் மட்டுமே சட்டம் படித்துவந்த காலத்தில், சட்டம் பயின்று, உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகவும் உயர்ந்தவர் இவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருவனந்தபுரத்தில் 1905ம் ஆண்டு பிறந்தவர், அன்னா சாண்டி அவர்கள். 1930ம் ஆண்டில் வழக்கறிஞராகப் பதிவு செய்த அன்னா சாண்டி அவர்கள், ‘கேரளத்தின் முதல் பெண் வக்கீல்’ என்ற பெயர் பெற்றவர். வழக்காடுவதில் சிறந்தவர் என்றும் புகழ் பெற்றார். ஆண்கள் மட்டுமே சட்டம் படித்துவந்த காலத்தில், கல்லூரியில் அவர்களோடு  அமர்ந்து, முதல்முதலாக சட்டம் படித்த ஒரே பெண் இவர்தான்.

கிரிமினல் வழக்குகளில் கவனம் செலுத்தி மிக விரைவாக முக்கிய வழக்கறிஞர்களின் பட்டியலில் இவரும் இடம்பெற்றார். 1937ம் ஆண்டில், திருவனந்தபுர அரசில் திவானாக பதவி வகித்த சர்.சி.பி. இராமசாமி ஐயரால், மாவட்ட  நீதிபதியாக, அன்னா சாண்டி அவர்கள் நியமிக்கப்பட்டார். இதனால், இந்தியாவில் இருக்கும் மாவட்டங்களில், நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர்தான் என்ற தனிப்பெரும் பெருமையும் இவரை வந்தடைந்தது.

உலக அளவில் உள்ள நீதிமன்றங்களில், நீதிபதி தகுதியை அடைந்த பெண்களில், இவர் இரண்டாம் இடத்தை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1959ம் ஆண்டில், உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 1967ம் ஆண்டு, ஏப்ரல் 5 வரை அப்பதவியில் இருந்தார். ஆத்மகதா (1973) என்ற தலைப்பில், தன் சுயசரிதையையும் இவர் எழுதினார். 1996ம் ஆண்டு, இவர் காலமானார். பெண் வழக்கறிஞர்களுக்கு இன்றளவும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார், அன்னா சாண்டி. (தினமணி)

14 September 2018, 15:37