தேடுதல்

Vatican News
குழந்தைகளுக்கு மருத்துவப் பணிகள் குழந்தைகளுக்கு மருத்துவப் பணிகள்  (AFP or licensors)

இமயமாகும் இளமை - நோயற்ற தலைமுறையை உருவாக்க...

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மருத்துவரைச் செயலாற்ற வைக்கும் மருத்துவரே, உண்மையில் திறமையான மருத்துவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் 

இறையியலிலும், இசையிலும் மேதையாக விளங்கிய இளம் பேராசிரியர் Albert Schweitzer அவர்கள், தன் 30வது வயதில், பேராசிரியர் பணியிலிருந்து விலகி, ஆப்ரிக்க மக்கள் நடுவே உழைப்பதற்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார். அம்மக்களின் முக்கியத் தேவை, மருத்துவ உதவி என்பதை அறிந்த ஆல்பர்ட் அவர்கள், அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இறையியலிலும், இசையிலும் பல சிகரங்களை அடைந்திருந்த ஆல்பர்ட் அவர்கள், அச்சிகரங்களிலிருந்து இறங்கி, ஆப்ரிக்கக் கண்டத்தில், ஏனையோர் செல்லத் தயங்கிய பகுதியொன்றில், வறியோருக்கென ஒரு மருத்துவமனையை எழுப்பி, தன் பணிகளைத் துவக்கினார்.

தன் மருத்துவப்பணியை, மறைப்பணி போல் செய்துவந்த ஆல்பர்ட் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் எவ்விதம் மருத்துவராக மாறி, நம்மை நாமே பேணிக்காக்க முடியும் என்பதை இவ்வாறு கூறியுள்ளார்: "ஒவ்வொரு நோயாளியும் தனக்குள்ளே ஒரு மருத்துவராக விளங்குகிறார். இந்த உண்மையைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல், நோயாளிகள், மருத்துவர்களான எங்களைத் தேடி வருகின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மருத்துவரைச் செயலாற்ற வைக்கும் மருத்துவரே, உண்மையில் திறமையான மருத்துவர்" என்று Albert Schweitzer அவர்கள் கூறியுள்ள கருத்து, மிக ஆழ்ந்த பொருள் கொண்டது.

இக்கூற்றின் முழுப்பொருளை, இளையோர் நன்கு உணர்ந்து, தங்கள் நலனைத் தாங்களே பராமரித்துக்கொள்ளும் பக்குவம் பெற்றால், வருங்காலம், நோயற்ற தலைமுறையாக உருவாகும்.

24 July 2018, 15:27