Cerca

Vatican News
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறாரின் பாதுகாப்புக்காக இந்தியச் சிறார் செபம் தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறாரின் பாதுகாப்புக்காக இந்தியச் சிறார் செபம்   (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – அடுத்த வாய்ப்பு எப்பொழுதுமே...

தாய்லாந்தில் மீதமுள்ள எட்டுச் சிறாரையும், அவர்களின் பயிற்சியாளரையும் மீட்பதற்கு இத்திங்களன்று தொடங்கப்பட்ட பணியில் மேலும் நான்கு சிறார் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,09,2018. தொடர்ந்து முயற்சி செய். கிடைத்தால் வெற்றி. இல்லாவிட்டால் அனுபவம். இது பெரியோர் சொல்லும் அறிவுரை. ஒரு தேர்வை நன்றாக எழுதவில்லை என கவலைப்படும் பிள்ளைகளிடம், பெற்றோர், இந்த முறை போனால் பரவாயில்லை, அடுத்து தேர்வை நன்றாக எழுது என ஊக்கப்படுத்துவார்கள். தேர்வில் மட்டுமல்ல, எந்த ஒரு போட்டிக்கும் செல்பவர்கள் தோற்றுவிட்டால், அதற்கென்ன பரவாயில்லை, அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளலாம் என்று தட்டிக்கொடுத்து தேற்றுவார்கள். இரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அந்நேரத்தில் பிரேசில் அணியினரும், இரசிகர்களும் கடும் சோகத்தில் மூழ்கினர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய பின் இறுதியில், தோல்வியுற்ற பிரேசில் அணியினரை ஊக்கப்படுத்தும் வகையில், "இங்கே பிரேசில் கொடிகளைப் பார்க்கிறேன், துணிவோடிருங்கள், எப்பொழுதுமே அடுத்த வாய்ப்பு உள்ளது" என்றார். தோல்விகளும் வெற்றிகளும் நிரந்தரமல்ல என கடந்த வார நிகழ்ச்சியில் நாம் பார்த்தோம். இந்த முறை இல்லாவிட்டால், அடுத்த முறை என்று, தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள் என்பதே நிதர்சனம்.

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறார் மீட்புப்பணி

தாய்லாந்தில், கடந்த 16 நாள்களாக அடிநிலக் குகைக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் 12 சிறுவர்களில் நான்கு பேர், இஞ்ஞாயிறன்று, நல்ல உடல்நலத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டு, ஹெலிகாப்டரில் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஜூன் 23ம் தேதி, 16 வயதுக்கு உட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும், அவர்களின் பயிற்சியாளரும் தாய்லாந்தின் தாம் லுவாங் மலைக் குகைக்குச் சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகையின் நுழைவு வாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சிறுவர்கள் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். சிறுவர்கள் குகைக்குள் சிக்கிய நாளிலிருந்து ஒன்பது நாள்களுக்குப் பிறகு, அவர்கள் குகைக்குள்ளேயே பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு திட்டின்மீது தவித்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாததால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழையினாலும், சேறு, சகதி போன்றவை காரணமாகவும், மீட்புப் பணிகளில் சிக்கல் நீடித்தன. தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது. பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்தக் குகைக்கு ஆக்ஸிஜன் பெட்டியை எடுத்துச் சென்ற தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஆயினும், மீட்புப்பணியைக் கைவிடாமல், தொடர்ந்து ஆற்றிய இந்தப் பணியாளர்களுக்கு, இஞ்ஞாயிறு சாதனை நாள்தான்.

விரல்கள் பத்தும் மூலதனம்

மாணவர்களின் சுயமுன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, ”விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற நூலை, சிறப்பாகச் செதுக்கியுள்ள க.இராமச்சந்திரன் அவர்கள், தொடர்ந்து முயற்சி செய்வதற்கு எடுத்துக்காட்டாக, தயிர்ப்பானைக்குள் தவறி விழுந்துவிட்ட இரண்டு தவளைகள் கதையை குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு தவளைகள் ஒரு தயிர்ப்பானைக்குள் தவறி விழுந்துவிட்டன. அதிலிருந்து வெளிவரத் தவளைகளுக்கு வழி தெரியவில்லை. “இதிலிருந்து நான் எப்படித் தப்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான், செத்தேன்” என்றது ஒரு தவளை. அதன் கால்கள் சக்தி இழக்க, சிறிது நேரத்திற்கெல்லாம் அது தயிரில் மூழ்கி இறந்தது. ஆனால், இன்னொரு தவளையோ மனந்தளரவில்லை. அது ’இதிலிருந்து நான் எப்படியும் தப்புவேன். கடைசிவரை என் முயற்சியைக் கைவிடமாட்டேன்’ என்று சொல்லி, தன் கால்களை உதைத்துக் கொண்டே இருந்தது. அப்படியே அது சளைக்காமல், முயற்சியைக் கைவிடாமல் கால்களை அசைத்துக்கொண்டே இருக்க, தயிர் கலங்கிக் கலங்கி வெண்ணெய் திரண்டு மிதக்கத் தொடங்கியது. உடனே தவளை வெண்ணெயின் மீதேறி, ஒரே தாவலில் தயிர்ப் பானைக்குள்ளிருந்து வெளியே குதித்தது. முயற்சி செய்பவர்களே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற முடியும் என்பதற்கு இக்கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வாழ்வில் உயர்வதற்கு பணம் தேவையில்லை, மாறாக, அறிவு, நேர்மறை எண்ணங்கள், இருக்கின்ற திறமையை அறிந்து பயன்படுத்துதல், நல்ல பழக்கவழக்கங்கள், ஒரு குறிக்கோள், அளவற்ற ஊக்கம், மன உறுதி, விடாமுயற்சி, உறுதியான சிந்தனைகள் போன்ற நெறிமுறைகளைக் கையாண்டலே போதும். மனம் எதை ஆழமாக நம்புகிறதோ, அதைத்தான் மனிதர் சாதிக்கின்றனர் என்று உளவியல் நிபுணர்கள் சொல்லுகிறார்கள். நான் எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன் என்பதில் உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகிவிடும். எனவே, வருகின்ற வாய்ப்புகளை நழுவவிடாமல், தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் உண்டு. நாம் எவ்வளவு காலம் வாழ்கின்றோம் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்கின்றோம் என்பதுதானே முக்கியம். தோல்வி அடைந்தவர்களைக்கூட இந்த உலகம் மன்னித்துவிடும். ஆனால் வாய்ப்புக் கிடைத்தும் அதைப் பயன்படுத்தாமல் கையைக் கட்டிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பவர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள். இந்த உலகத்தில் யாருமே தோற்பதற்கு வாய்ப்பில்லை. நான் தோற்றுவிட்டேன் என்று ஒப்புக்கொள்பவர்கள் மட்டுமே தோற்கிறார்கள் என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார், பேராசிரியர் க.இராமச்சந்திரன். அன்பர்களே, வெறுங்கை என்பது மூடத்தனம், ஆனால், விரல்கள் பத்துமே மூலதனம்.

ஊக்கமுடையவரே உடையவர்

ஒரு விளையாட்டிலோ அல்லது ஒரு தேர்விலோ அல்லது ஒரு புது முயற்சியிலோ தோல்வி கண்டால், மனம் தளர்ந்து உற்சாகமின்றி இருந்தால் வாழ்வில் உயர முடியாது. பகவத் கீதையும், "எப்பொழுதும் ஓய்வுடன் இருப்பவன், எதையுமே அனுபவிக்கமாட்டான்” என்று சொல்கிறது. வள்ளுவரும், ஊக்கமுடையவர்களே, உடையவர்கள் என்று சொல்லத்தக்கவர்கள், அந்த ஊக்கம் மட்டும் இல்லாமல் வேறு எதை உடையவர்களாய் இருந்தாலும் பயனில்லை என்றார். 'உடையர் எனப்படு தூக்கமஃ தில்லார், உடைய துடையரோ மற்று.’ எனவே ஒவ்வொரு மனிதரின் வளர்ச்சியும், அவனில் இருக்கின்ற  ஊக்கத்தைப் பொருத்தே அமைந்திருக்கின்றது. ஒரு சமயம், முதியவர் ஒருவர், வயதான கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தார். மாலை மங்கிய நேரம். வரும் வழியில் கைப்பிடிச் சுவர் இல்லாத ஒரு  பாழுங்கிணற்றில் அந்தக் கழுதை தவறி விழுந்துவிட்டது. முதியவர் சிந்தித்தார். கழுதையோ வயதானது. இனி பொதி சுமக்க உதவாது. அதைப் பராமரிக்கப் பெரும் செலவும் ஆகிறது. இப்போது இந்தக் கிணற்றிலேயே அதற்குச் சமாதி கட்ட வேண்டியதுதான் என்று முடிவு செய்தார். சப்தம்போட்டு, ஊர்மக்கள் சிலரை அழைத்தார். பலர் ஓடிவந்தார்கள். முதியவர் சொன்னபடி, அந்த இருளில், பாழுங்கிணற்றின் உள்ளே மண்ணை அள்ளி அள்ளிக் வீசத் தொடங்கினார்கள். ஆனால் கிணற்றின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அந்த இருளில் யாருமே கவனிக்கவில்லை. உள்ளே தவறி விழுந்த வயதான கழுதை, தன்மேல் மண் வந்து விழுந்த போதெல்லாம் அதை உதறி உதறிக் கீழே தள்ளி, அந்த மண்ணின்மேல் ஏறி நின்று கொண்டது. இப்படியே மெல்ல மெல்ல மேலே வந்த கழுதை ஒரு சந்தர்ப்பத்தில் உயரம் வசதியாக இருந்ததால் கிணற்றின் வெளியே தாவி ஒரே ஓட்டமாக ஓடித் தப்பிச் சென்றுவிட்டது. அத்தனை பேரிடமிருந்தும் அந்த வயதான கழுதையைக் காப்பாற்றியது எது? அதன் ஊக்கம்தான். இயற்கையாகவே நன்கு ஓடும் திறன் பெற்ற முயல், ஆமையோடு ஓட்டப் பந்தயத்தில் தோற்ற கதை நமக்கு நன்றாகத் தெரியும். ஆமை மெதுவாக நடந்தாலும் ஊக்கத்தோடு, விடாமல் நடந்ததால் வெற்றி இலக்கைத் தொட்டது.  ஆனால் முயலோ, நன்கு ஓடும் திறனைப் பெற்றிருந்தாலும், தொடர்ந்து ஓடும் ஊக்கமின்றி இடையில் களைத்து உறங்கி விட்டதால் தோல்வியைத் தழுவியது.

வாழ்க்கைப்  பந்தயத்தில் வெற்றிபெற ஆற்றல் இருந்தால் மட்டும் போதாது, அந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்ற ஊக்கமும் இருக்க வேண்டும். கடந்த காலத்தை எண்ணிக் கவலைகொண்டு ஊக்கமின்றி நிகழ்காலத்தைத் தவறவிடுபவர்களை, மூடர்கள் என மகாகவி பாரதி பாடினார். 'சென்றதினி மீளாது மூடரே நீர், சென்றதையே தினம்தினமும் சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் என்றார் பாரதி. ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவை பாட்டி. எனவே, ஒருமுறை வாழ்வில் தோல்வியுற்றால், சோர்ந்து விடாமல், எப்பொழுதும் அடுத்த வாய்ப்பு உள்ளது என்பதை நினைத்து உற்சாகத்துடன் செயல்படுவோம். வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்துமே மூலதனம்.

09 July 2018, 15:43