சோதனை பதிப்பு

Cerca

Vatican News
இந்திய வகுப்பறையில் விஷால்பாய் படேல் இந்திய வகுப்பறையில் விஷால்பாய் படேல்  (AFP or licensors)

இமயமாகும் இளமை – உச்சியைத் தொட உதவிய படிகளை...

உத்தனப்பள்ளி அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, பாடம் நடத்தி வருகிறார் இளைஞர் மருத்துவர் ரஜினி கலையரசன்

மேரி தெரேசா - வத்திக்கான்

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளிக்கு அருகிலுள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ரஜினி கலையரசன். 24 வயது நிறைந்த இவர், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவர், தந்தை வழி பாட்டியின் அரவணைப்பில், உத்தனப்பள்ளி அரசு பள்ளியில், சத்துணவில் கிடைத்த, மதிய உணவைச் சாப்பிட்டு, ஆர்வமாகப் படித்து வந்தார். இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 468 மதிப்பெண் பெற்றதால், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியில், இலவசமாக மேல்நிலை கல்வி கற்க ஏற்பாடு செய்தனர். பின்னர் இவர், பிளஸ் 2 தேர்வில், 1,166 மதிப்பெண் பெற்றார். மதிப்பெண்ணின் அடிப்படையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது. அங்கு படித்து, கடந்த, மே மாதம் எம்.பி.பி.எஸ். முடித்தார் இவர். தற்போது உத்தனப்பள்ளியில் சிறிய மருத்துவமனை நடத்தி வரும் ரஜினி கலையரசன் அவர்கள், ஆரம்பக்கல்வி கற்ற, உத்தனப்பள்ளி அரசு துவக்கப்பள்ளியை மறக்காமல், நேரம் கிடைக்கும்போது, ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, அறிவியல் மற்றும், தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார். ரஜினி கலையரசன் அவர்கள், தனது கடந்தகாலம் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார். என் பள்ளிக் காலங்களில், மதிய உணவை இரவுக்கும் சேர்த்து வாங்கி வைத்துக் கொள்வேன். எம்.பி.பி.எஸ். படிக்கும்போது என் நிலையறிந்த, நெல்லை ஆட்சியர் கருணாகரன், மருத்துவர் சுமிதா ஆகியோர் உதவி செய்தனர். எம்.பி.பி.எஸ். படித்துக்கொண்டே, நெல்லையில் உள்ள தனியார் பள்ளி, விடுதி மாணவ, மாணவியருக்கு பாடம் எடுத்து, எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதித்து, என் செலவுகளைப் பார்த்துக் கொண்டேன். நான் எம்.பி.பி.எஸ். படிக்கக் காரணம் என் ஆசிரியர்கள்தான். எனவே ஆசிரியராக வர வேண்டும் என்ற ஆசை, எனக்கு இருந்ததால், உத்தனப்பள்ளி அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, தலைமை ஆசிரியை ஜெயராக்கினி அவர்களின் அனுமதியுடன், பாடம் நடத்தி வருகிறேன். மேலும், எம்.டி. படிக்கவே, சிறிய மருத்துவமனையை நடத்தி வருகிறேன். (தினமலர்)

30 July 2018, 15:28