தேடுதல்

விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை 

புதுமைகள் போன்ற அசாதாரண நிகழ்வுகள் குறித்த விதிமுறைகள்

மக்கள் நம்பும் அசாதாரண நிகழ்வுகளில் இறைச்செயல்பாடுகளுக்குரிய அடையாளங்கள் இருக்கின்றனவா என்பதை திருஅவை தெளிந்து தேர்வு செய்யும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருஅவை விசுவாசிகளிடையே புதுமைகள் போன்று புதிதாக அசாதாரண தோற்ற நிகழ்வுகள் இடம் பெற்று மக்கள் நம்பி செயல்படும்போது, தல திருஅவை மற்றும் அகில உலகத் திருஅவை பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்த ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத் துறை.

இத்தகைய தோற்ற நிகழ்வுகள் இடம்பெறும்போது, தலத்திருஅவையோ, திருப்பீடமோ இதனை ஓர் இயற்கையை மீறிய அசாதரண நிகழ்வு என்று அறிக்கையிடாமல், அதேவேளையில் பக்தி முயற்சிகளையும் திருப்பயணங்களையும் ஊக்குவிக்க முன்வரவேண்டும் எனவும் இந்த அறிக்கை துவக்கத்திலேயே தெளிவாகத் தெரிவிக்கிறது.

இயற்கையைத் தாண்டிய அசாதாரண தோற்ற நிகழ்வு நிலை குறித்த இந்தப் புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய இந்த ஆணை மே 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டு, மே 19-ஆம் தேதி பெந்தக்கோஸ்து திருவிழா அன்று நடைமுறைக்கு வருகிறது.

அசாதாரண தோற்ற நிகழ்வுகள் தொடர்புடைய விதிமுறை மாற்றங்கள் குறித்து 2019-ஆம் ஆண்டே ஆய்வுகள் துவக்கப்பட்டதாகவும், இம்மாதம் 4-ஆம் தேதி இந்தப் புதிய விதிமுறைகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்தார் விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Víctor Manuel Fernández.

பலவேளைகளில் இந்த அசாதாரண தோற்ற நிகழ்வுகள் ஆன்மிகக் கனிகளைக் கொடுத்துள்ளதோடு, விசுவாசம், பக்தி முயற்சிகள், உடன்பிறந்த உணர்வு நிலைகள், பிறரன்புப் பணிகள் ஆகியவை பெருகிடவும் உதவியுள்ளன எனக்கூறும் கர்தினால், இதனால் பல திருத்தலங்கள் உருவாகவும் வழி பிறந்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இத்தகையை அசாதரண தோற்ற நிகழ்வுகள், மக்களைத் தவறாக வழி நடத்தவும் காரணமாகி, இலாப நோக்குடனும், அதிகார ஆசையுடனும், புகழ் மற்றும் ஏனைய தனிப்பட்ட இலாபங்களுக்காகவும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் Manuel Fernández.

மக்கள் நம்பும் அசாதாரண நிகழ்வுகளில் இறைச்செயல்பாடுகளுக்குரிய அடையாளங்கள் இருக்கின்றனவா என்பதையும், விசுவாசம் மற்றும் ஒழுக்க ரீதி கோட்பாடுகளுக்கு எதிரானவை அந்தத் தோற்ற நிகழ்வு தொடர்புடையவைகளில் இடம்பெற்றுள்ளனவா என்பதையும், இந்த அசாதாரண நிகழ்வுகள் குறித்த ஆன்மிகக் கனிகளை அனுமதித்தல் அல்லது அவைகளின் தீமை குறித்து மக்களுக்கு எச்சரித்தல், அவைகளின் மேய்ப்பணி மதிப்பீடுகள் குறித்து கலந்தாலோசித்தல் போன்றவைகளையும் திருஅவை தெளிந்து தேர்வு செய்யும் என இந்தப் புதிய விதிமுறைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.

இயற்கைக்கு மீறிய ஒரு அசாதரண இறைத்தலையீடு இருப்பதாக நம்பப்படும் வேளைகளில் அவ்விடங்களில் மேய்ப்பணி மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டு, திருப்பயணங்களை ஊக்குவிக்க தலத்திருஅவை அங்கத்தினர்களைக் கேட்டுள்ளது இந்த விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

மேலும், இத்தகைய சிறப்புத் தோற்றநிலைகள் இடம்பெறும் வேளைகளில் அங்கு எழுத்துவடிவில் எதுவும் அளிக்கப்பட்டிருந்தால், அங்கு விசுவாசக்கோட்பாடு தொடர்புடைய தெளிவுத்தன்மை தேவைப்படும் என்பதையும், ஆன்மிகக் கனிகளை வழங்குவதாக இருக்கும் அசாதரண நிகழ்வுகள் தொடர்புடைய சில குழப்பமான கூறுகள் வெளிப்படும்போது, உடனடி தடைகள் மக்களின் விசுவாசத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்பதால், தடைகளை மேற்கொள்ளாமல், அதேவேளை இத்தகைய நிகழ்வுகளை ஊக்குவிப்பதிலிருந்தும் ஆயர்கள் விலகியிருக்க வேண்டும் எனவும் கேட்கிறது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

குழப்பமான கூறுகள் என்னும்போது இவை அசாதரண தோற்ற நிலைகளைப் பற்றியதல்ல, மாறாக, அந்த நிகழ்வுகளை வைத்து பொருளாதார இலாபம் அடைய முயல்வது, மற்றும் ஒழுக்க நெறிமுறைகளுக்கு எதிரான நிகழ்வுகளை ஊக்குவிப்பது தொடர்புடையவைகளை குறிப்பிடுவதாகக் கூறும் இந்தத் திருப்பீடத்துறை, இந்த விவகாரங்களில் தலத்திருஅவை அதிகாரிகள் தலையிட்டு தீர்வுகாண வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

அசாரண நிகழ்வுகள், இறைத்தலையீடுகள் போன்றவை குறித்த விடயங்கள் எழும்போது, அவைகளைத் தெளிவாக ஆராய்ந்து அது குறித்த விவரங்களை விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீட அவையிடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆயர்களின் கடமையையும் வலியுறுத்தியுள்ளது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத் துறை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2024, 15:49