தேடுதல்

புனித பியோ புனித பியோ   (fotografo Elia Stelluto e Parrocchia Paupisi)

தந்தை பியோவின் 10 நம்பத்தகுந்த புகைப்படங்கள் வெளியீடு!

புனித பியோ பிறரன்பு அமைப்பானது, 20 -ஆம் நூற்றாண்டின் அன்புப் புனிதர், தந்தை பியோ மீதான பக்தியை வளர்க்கும் பொருட்டு, பத்து புகைப்படங்களை வெளியிட உள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தகவல்தொடர்பு மற்றும் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருபீடத்துறை, ஏப்ரல் 29 வரும் திங்களன்று, செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றன என்றும், அப்போது புனித பியோ பிறரன்பு அமைப்பு தந்தை பியோவின் 10 நம்பத்தகுந்த புகைப்படங்களை வெளியிடுகிறது என்றும் அவ்வமைப்பின் செய்திக்குறிப்புத் தெரிவிக்கின்றது.  

"புனிதர் பியோவின் புகைப்படங்கள் - ஒரு புனிதரின் நினைவலைகள்" என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்வு, புனித பியோ புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 25-ஆம் ஆண்டின் நிறைவைக் குறிக்கும் விதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

கத்தோலிக்கத் திருஅவையின் சமகால புனிதர்களில் ஒருவரான புனித பியோ பற்றிய அறிவையும் பக்தியையும் ஊக்குவிக்கும் ஓர் இலாப நோக்கற்ற, தொண்டு நிறுவனமான புனித பியோ பிறரன்பு அமைப்பின் 10-வது ஆண்டு விழாவையும் இந்நிகழ்வு நினைவுகூருகிறது என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

முன்பு வெளியிடப்படாத புகைப்படங்கள் உட்பட, புனித பியோவின் புகைப்படங்கள், அவ்வமைப்பின் நிறுவனர் லூசியானோ லமோனார்கா (Luciano Lamonarca) மற்றும், தந்தை பியோவின் தனிப்பட்ட புகைப்படக் கலைஞரான எலியா ஸ்டெல்லுடோவுடன் இணைந்து தனிப்பட்ட முறையில் தேர்வுசெய்யப்பட்டதாகும் என்றும் அச்செய்திக் குறிப்பு உரைக்கிறது.

ஏப்ரல் 29, வரும் திங்களன்று, உரோமை நேரப்படி மதியம் 12:00 மணிக்கு ஃபிலிமோடெக்கா வத்திக்கானாவில் (Filmoteca Vaticana), செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்றும், www.therealsaintpio.org என்ற பிரத்யேக இணையதளத்தில் அப்படங்கள் வெளியிடப்பட்டு அதேநாள் முதல் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது அவ்வமைப்பின் செய்திக் குறிப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2024, 12:23