தேடுதல்

குழந்தையுடன் முதியோர் குழந்தையுடன் முதியோர்   (bernardbodo.com)

முதியவர்கள் மற்றும் பேரக்குழந்தைகளைச் சந்திக்கிறார் திருத்தந்தை!

முதியோர்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தின் தொடர்புடைய கடமைகளை முன்னிலைப்படுத்தி, உணர்த்தும் கிறிஸ்தவ விழுமியங்களை இந்நிகழ்வு ஈர்க்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இத்தாலியில் 1 கோடியே 40 இலட்சம் முதியவர்கள் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்பான அரசியல், பொருளாதார, மத மற்றும் கலாச்சார பிரச்சனைகளை நிவர்த்தி செய்வது குறைவாக உள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார் வாழ்வியல் பாப்பிறை கலைக்கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா (Vincenzo Paglia)

ஏப்ரல் 27, வரும் சனிக்கிழமையன்று, வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுலரங்கில் நடைபெறவிருக்கும் தாத்தா, பாட்டி, முதியவர்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடனான திருத்தந்தையின் சந்திப்பு குறித்து ஏப்ரல் 22, இத்திங்களன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார் பேராயர் பாலியா.

தலைமுறைகளுக்கு இடையே உரையாடலை வளர்ப்பது மற்றும் சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் மூன்றாம் வயதை மேம்படுத்துதல் ஆகியவை, ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறும் "The Caress and the Smile" என்ற இந்த நிகழ்வின் குறிக்கோள்களாகும் என்றும் கூறினார் பேராயர் பாலியா.

இந்நிகழ்வானது இத்தாலியின் "Fondazione Età Grande" (Old Age Foundation) என்ற அமைப்பின் நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது என்றும், இதில் ஏறத்தாழ 6,000 தாத்தா, பாட்டி, முதியவர்கள் மற்றும் பேரக்குழந்தைகள் திருத்தந்தையுடன் பங்குபெறுவார்கள் என்றும்  குறிப்பிட்டார் பேராயர் பாலியா.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது புதன் பொது மறைக்கல்வி உரையின்போது வழங்கியுள்ள முதுமை குறித்த அவரது பத்தொன்பது மறைக்கல்வி படிப்பினைகளும், மூன்றாம் வயதைக் கருத்தில் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை சுட்டுகின்றன என்றும் எடுத்துக்காட்டினார் பேராயர் பாலியா.

இத்தாலிய அரசு, தன்னிறைவு இல்லாத சட்டச் சீர்திருத்தங்கள் தொடர்பான 2023-ஆம் ஆண்டின் 33-ஆம் சட்டத்துடன், முதியோருக்கான பராமரிப்பை மறுசீரமைக்க உறுதிபூண்டுள்ளது என்று கூறியுள்ள பேராயர் பாலியா அவர்கள், மேலும் பிற நாடுகளும் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும் உரைத்தார். 

எல்லாத் தலைமுறையினரும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதாலும், ஒருவரையொருவர் பிரிந்து வாழ முடியாது என்பதாலும், தாத்தா பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளுடனான பிணைப்பின் வழியாகத் தலைமுறைகளுக்கு இடையேயான அரவணைப்பு, புரிதல் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்க உதவ முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் பேராயர் பாலியா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2024, 12:16