தேடுதல்

பேரக்குழந்தையுடன் தாத்தா பாட்டி பேரக்குழந்தையுடன் தாத்தா பாட்டி  (bernardbodo.com)

தாத்தா பாட்டிகளையும் பேரக்குழந்தைகளையும் சந்திக்கும் திருத்தந்தை

பேராயர் பாலியா : முதுமை என்பது வீணாக்கப்படுவதோ அல்லது சுமையோ அல்ல, அதேவேளை இது ஏனைய வாழ்க்கைப் பருவங்களோடு தொடர்பு அறுந்ததும் அல்ல.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

குடும்பத்தில் தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் திருஅவை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏப்ரல் 27, இச்சனிக்கிழமையன்று இத்தாலியின் ஏறக்குறைய 6000 தாத்தா பாட்டிகள் மற்றும் பேரக்குழந்தைகளை வத்திக்கானில் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாத்தா பாட்டிகளையும் பேரக்குழந்தைகளையும் ஒரு சேர வத்திக்கானின் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சனிக்கிழமை உள்ளூர் நேரம் 9.30 மணிக்கு திருத்தந்தை சந்திக்க உள்ள இந்நிகழ்ச்சிக்கு ‘அன்புடன் வருடுதலும் புன்னகையும்’ என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவில் வயது முதிர்ந்தோரைக் கொண்டிருக்கும் நாடுகளுள் இரண்டாம் இடத்தை வகிக்கும் இத்தாலியில் நான்கு தலைமுறைகள் ஒரே நேரத்தில் வாழ்வது முதன்முறையாக வரலாற்றில் இடம்பெற்றுவருகிறது என இந்த சந்திப்பு பற்றி எடுத்துரைத்தார், வாழ்வுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பேராயர் வின்சென்ஸோ பாலியா.

சனிக்கிழமையன்று திருத்தந்தையுடன் இடம்பெற உள்ள இந்த சந்திப்பு, முதுமைப் பற்றி ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்கும் என்ற பேராயர் பாலியா அவர்கள், முதுமை என்பது வீணாக்கப்படுவதோ அல்லது சுமையோ அல்ல, அதேவேளை இது ஏனைய வாழ்க்கைப் பருவங்களோடு தொடர்பு அறுந்ததும் அல்ல என்று கூறினார்.  

குழந்தைப் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்துவரும் இத்தாலியில் தாத்தா பாட்டிகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடையேயான சிறப்புப் பிணைப்பு மிக முக்கியமானது என்பதையும் எடுத்தியம்பினார் பேராயர் பாலியா.

சனிக்கிழமை காலை உள்ளூர் நேரம் 8.30 மணிக்கு முதுமை குறித்த ஆழ்ந்த சிந்தனைக்கு அழைப்புவிடுத்து துவங்கும் இந்த கூட்டம், ஏறக்குறைய 9.30 மணிக்கு திருத்தந்தையின் பங்கேற்புடன், இரண்டு தாத்தா பாட்டிகள் மற்றும் 3 பேரக்குழந்தைகளின் சான்றுப் பகிர்வுடன் தொடரும்.

இந்த சந்திப்பு தவிர, தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான உலக நாள் இவ்வாண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி சிறப்பிக்கப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2024, 14:46