தேடுதல்

பேராயர் Gabriele Caccia பேராயர் Gabriele Caccia  

அனைத்து பொருளாதார இலாபங்களையும் தாண்டியது மனித மாண்பு

மனிதகுலத்திற்கு எதிரானக் குற்றங்களை அனைத்துலகக் குற்றங்களாக அங்கீகரிப்பது, அனைத்துலக ஒத்துழைப்புக்கும், குற்றங்கள் தடுக்கப்படுவதற்கும், தண்டிக்கப்படுவதற்கும் உதவும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அனைத்துலகக் குற்றங்கள் என அறியப்படும் மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் தடை செய்யப்படுவது இன்றியமையாதது என அனைத்துலக சட்ட அமைப்பு அறிவித்திருப்பது சரியான வழிமுறை எனத் தெரிவித்துள்ளார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில் ஐ.நா. பொதுஅவையின் 78-வது அவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia அவர்கள்,  மனிதகுலத்திற்கு எதிரானக் குற்றங்களை அனைத்துலகக் குற்றங்களாக அங்கீகரிப்பது, அனைத்துலக ஒத்துழைப்புக்கும், கொடுமையான குற்றங்கள் தடுக்கப்படுவதற்கும், தண்டிக்கப்படுவதற்கும் உதவும் என்றார்.

ஏப்ரல் முதல்தேதி திங்கள்கிழமையன்று ஐ.நா. கூட்டத்தில் இவ்வாறு உரையாற்றிய பேராயர் காச்சா அவர்கள், பொதுநலனை மனதில் கொண்டதாக, மனித மாண்பு என்பது அனைத்துவிதமான பொருளாதார நோக்கங்களையும் தாண்டிய ஒன்றாக உயர்விடத்தில் மதிக்கப்பட வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டி கேட்டுக்கொண்டார். 

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆற்றப்படும்போது மனித மாண்பு தாக்கப்படுகிறது, ஆனால் இழக்கப்படுவதில்லை என்ற பேராயர், மனித உரிமைகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் மனித மாண்பு எல்லாச் சூழலிலும் காக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் மற்றும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், தடுக்கப்படுவதற்கான விதிமுறைகள் போதுமான அளவு பின்பற்றப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் காச்சா.

நாட்டு நலன் என்ற காரணத்தைக் காட்டி எவரும் மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்களை நியாயப்படுத்த முடியாது என்பதையும் ஐ.நா. பொது அவையில் ஆற்றிய உரையில் எடுத்தியம்பினார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2024, 14:52