தேடுதல்

பேராயர் Gabriele Caccia பேராயர் Gabriele Caccia 

பூர்வகுடி இளையோர் கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் : திருப்பீடம்

பூர்வகுடி மக்களின் அடையாளத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் மூதாதையர் நிலங்கள், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் அவ்விளையோர் முன்னணியில் உள்ளனர் : பேராயர் Gabriele Caccia.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பூர்வகுடி இளையோர் தலைமுறைகளுக்கு இடையே உறவுப் பாலங்களாகவும், தலைமுறைகளுக்கு இடையேயான உரையாடல், புரிதல் மற்றும் அவர்களின் சமூகங்களுக்குள்ளேயே ஒத்துழைப்பை வளர்பவர்களாகவும் திகழ்கின்றனர் எனத் தெரிவித்தார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia.

ஏப்ரல் 16, இச்செவ்வாயன்று, நியூயார்க்கில் நடைபெற்ற பூர்வகுடிகளின் பிரச்சனைகளுக்கான ஐ.நா நிரந்தர மன்றத்தின் 23-வது அமர்வில் உரைநிகழ்ந்தியபோது இவ்வாறு கூறிய பேராயர் Caccia அவர்கள், பூர்வகுடி இளையோரை கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாகப் போற்றுகிறது திருப்பீடம் என்றும் சுட்டிக்காட்டினார்.

"பூர்வகுடி மக்களின் உரிமைகள் மீதான ஐ.நா தீர்மானத்தின் பின்னணியில் பூர்வகுடி மக்களின் சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துதல்: பூர்வகுடி இளையோரின் குரல்களை வலியுறுத்துதல்" என்ற கருப்பொருளில் நிகழ்ந்த இந்த அமர்வில், பூர்வகுடி மக்களின் பிரச்சனைகளுக்கான நிரந்தர மன்றத்தின் பணியை திருப்பீடம் அங்கீகரிப்பதாக கூறியதுடன், இந்த மையகருத்தின் அடிப்படையில் தனது சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டார் பேராயர் Caccia.

பூர்வகுடி மக்களின் உரிமைகள் பற்றிய ஐ.நா.-வின் தீர்மானத்தைக் (UNDRIP) குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Caccia அவர்கள், அம்மக்களின் கலாச்சாரத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாவலர்களாகப் பூர்வகுடி இளையோரின் பங்கை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தையும் விவரித்தார்.

நீதியான மற்றும் மனிதாபிமான உலகைக் கட்டியெழுப்புவதற்காகவும், ஒதுக்குதல், வீண்விரயம் மற்றும் ஏழ்மைக்கு எதிராகப் போராடுவதன் வழியாகவும், அவர்களின் கலாச்சாரங்களையும் வேர்களையும் (roots) பாதுகாக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பூர்வகுடி இளையோரை ஊக்குவித்ததையும் தனது உரையில் எடுத்துக்காட்டினார் பேராயர் Caccia.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2024, 15:32