தேடுதல்

எருசலேமில் புனித வெள்ளி நிகழ்வு எருசலேமில் புனித வெள்ளி நிகழ்வு  (ANSA)

புனித பூமி மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் நிதி திரட்டல்

புனித பூமி கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள், தங்குமிடங்கள், கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறது திருஅவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் புனித பூமியின் வளர்ச்சித் திட்டங்களுக்கென புனித வெள்ளியன்று உலகின் அனைத்துக் கோவில்களிலும் திரட்டப்படும் காணிக்கையைக் குறித்து விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கான திருப்பீடத்துறை.

புனித பூமிக்கான பாப்பிறை நிதி திரட்டல் என்ற இந்த புனித வெள்ளி காணிக்கை நிதி திரட்டல், இந்த ஆண்டு போரால் துயருறும் புனித பூமி மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாக இருக்கட்டும் என தன் விண்ணப்பதில் தெரிவித்துள்ளார் இத்திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் கிளவ்தியோ குகரோத்தி.

புனித பூமியிலுள்ள தங்கள் கிறிஸ்தவ வேர்கள் அழிக்கப்படாமல் இருக்க, தங்கள் உயிரையே கையளித்து மறைசாட்சிகளாக மாறியுள்ள மக்களை இந்நேரத்தில் நினைவு கூர்வோம் என அழைப்புவிடுக்கும் இந்த செய்தி, இன்றைய சூழலில் எண்ணற்ற மக்கள் புனித பூமியில் தங்கள் சொந்த இடங்களை விட்டு விலகிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் நினைவூட்டியுள்ளது.

புனித பவுல் கூறுவதுபோல், கிறிஸ்துவின் நறுமணத்தைப் பரப்பிட எங்களுக்கு உதவிடுங்கள் என ஈராக், சிரியா, லெபனன் மற்றும் பல்வேறு பகுதிகளின் மக்கள் விண்ணப்பிப்பதையும் இச்செய்தியில் சுட்டிக்காட்டும் கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கான திருப்பீடத்துறை, இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு உதவும் விதமாக, வேலை வாய்ப்புக்கள், தங்குமிடங்கள், கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்க இந்த காணிக்கைத் திரட்டல் வழி உலக கத்தோலிக்கர்கள் உதவ முடியும் எனவும் தெரிவிக்கிறது.

யெருசலேம், பாலஸ்தீனம், இஸ்ராயேல், ஜோர்தான், சைப்ரஸ், சிரியா, லெபனான், எகிப்து, எத்தியோப்பியா, எரிட்ரியா, துருக்கி, ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் இந்த புனித வெள்ளி நிதி திரட்டலால் பயன்பெறுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் திரட்டப்படும் நிதியில் 65 விழுக்காடு புனித பூமி திட்டங்களுக்கும், 35 விழுக்காடு மத்தியக்கிழக்குப் பகுதியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும், குருத்துவ பயிற்சிகளுக்கு எனவும் செலவளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, அதாவது 2023ஆம் ஆண்டு புனித பூமிக்கு என்ற பெயரில் உலகம் முழுவதும் இடம்பெற்ற புனித வெள்ளி நிதி திரட்டல் வழி 65 இலட்சத்து 71 ஆயிரத்து 893 யூரோக்களும் 96 சென்ட்களும் திரட்டப்பட்டதாக இத்திருப்பீடத்துறை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2024, 15:43