தேடுதல்

சித்ரவதை காலத்தில் ஜப்பான் கிறிஸ்தவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிலுவை சித்ரவதை காலத்தில் ஜப்பான் கிறிஸ்தவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிலுவை 

உலகின் மொத்த நாடுகளுள் மூன்றில் ஒன்றில் மத உரிமை மீறல்கள்

பேராயர் பலெஸ்த்ரேரோ : மத நம்பிக்கையுடையோர் பாகுபாட்டுடன் நடத்தப்படுதலும், சித்ரவதைப்படுத்தப்படலும் உலகம் முழுவதும் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மத உரிமைகள் உட்பட மனித உரிமைகள் மீறப்படுவது தடுக்கப்பட புதிய புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என அனைத்துலக சமுதாயத்தை நோக்கி அழைப்புவிடுத்துள்ளார் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மற்றும் அனைத்துலக அமைப்புகளுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் எத்தோரே பலெஸ்த்ரேரோ.

ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையின் 55வது கூட்டத் தொடரில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேராயர் பலெஸ்த்ரேரோ அவர்கள், கருத்து சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம், மத சுதந்திரம் போன்றவை உட்பட மனிதனின் உரிமைகள் மீறப்பட்டுவருகின்றன என்ற கவலையை வெளியிட்டு, மத நம்பிக்கையுடையோர் பாகுபாட்டுடன் நடத்தப்படுதலும், சித்ரவதைப்படுத்தப்படலும் உலகம் முழுவதும் பெரிய அளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Aid to the Church in Need என்ற திருப்பீட அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டிய திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் பலெஸ்த்ரேரோ அவர்கள், உலகின் மொத்த நாடுகளுள் மூன்றில் ஒன்று மத உரிமை மீறல்களை அனுபவித்து வருவதாகவும், இதில் 490 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் எடுத்துரைத்தார்.

அமைதிக்கான அடிப்படையாக இருக்கும் மனித மாண்பு மதிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கான அனைத்துலக சமுதாயத்தின் முயற்சிகள் இருக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் பேராயர் பலெஸ்த்ரேரோ.

செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு அது வளர்ச்சி கண்டு வரும் இன்றைய காலக்கட்டத்தில் அதற்கு வழிகாட்டும் விதிகளாக மனித மாண்பு செயல்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த பேராயர், செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படை மனித உரிமைகளை மதிப்பதோடு, மனித ஆற்றல் வளத்தோடு போட்டியிடுவதாக இருக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

இன்றைய உலகில் நாம் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள், மனித மாண்பு மதிக்கப்படாமையிலிருந்தும், ஒருவரை ஒருவர் நாம் சார்ந்திருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளாமையிலிருந்தும் பிறக்கின்றன என்பதை சுட்டிக்காட்டி தன் கவலையை வெளியிட்டார் பேராயர் பலெஸ்த்ரேரோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2024, 15:43